உத்தரபிரதேச மாநிலத்தில் இந்தியா-நேபாள எல்லைப் பகுதியில் ஒரு சீனப் பெண் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைரியா பசார் எல்லைச் சோதனைச் சாவடி அருகே நேற்று நடைபெற்றது.
எல்லைப் பாதுகாப்புப் படை (SSB) வீரர்கள் தங்கள் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நேபாளப் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர்.
அந்தப் பெண்ணிடம் உரிய பாஸ்போர்ட், விசா அல்லது வேறு எந்த அடையாள ஆவணங்களும் இல்லை என்பது சோதனையில் தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் சீனாவைச் சேர்ந்தவர் என்றும் உறுதியானது.
இதையும் படிங்க: கேரளாவின் மலையாளம் கட்டாய சட்டத்திற்கு கர்நாடகாவின் கடும் எதிர்ப்பு.. பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்..!!
உடனடியாக அந்தப் பெண்ணை எல்லைப் பாதுகாப்புப் படையினர் அருகிலுள்ள போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், அவருடன் கிடைத்த ஒரு சிறிய சீட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில் அந்தப் பெண் ஹுவாஜியா ஜி (Huajia Ji) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் சீன மொழியை மட்டுமே பேசுவதால், மொழிபெயர்ப்பாளர் இல்லாத நிலையில் மேலும் விரிவான தகவல்களை உடனடியாகப் பெற முடியவில்லை.
தற்போது போலீசார் பல முக்கிய கேள்விகளுக்கு விடை தேடி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண் சீனாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதற்கான உண்மையான நோக்கம் என்ன? அவருக்கு உதவியாக இருந்தவர்கள் அல்லது தொடர்புகள் யாரேனும் உள்ளனரா? போன்றவை தற்போதைய விசாரணையின் மையமாக உள்ளன.
இந்த சம்பவம் இந்தியா-நேபாள எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது. எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத ஊடுருவல் தொடர்பான விசாரணை முழு வீச்சில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவல்கள் கிடைக்கும்போது வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரானால் இந்தியாவுக்கு புது தலைவலி!! ரூ.2,000 கோடி மதிப்பிலான 12 லட்சம் டன் பாசுமதி அரிசி தேக்கம்!