ஈரான் இந்திய பாசுமதி அரிசியின் இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் டன் பாசுமதி அரிசியை (பெரும்பாலும் செல்லா - பார்பாய்ல்ட் வகை) இறக்குமதி செய்கிறது. இதன் மதிப்பு தோராயமாக ரூ.12,000 கோடி ஆகும். சவுதி அரேபியாவுக்குப் பிறகு ஈரான் தான் இந்திய பாசுமதி அரிசிக்கு மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது.
தற்போது ஈரானிய ரியால் அமெரிக்க டாலருக்கு எதிராக மிகப்பெரிய அளவில் சரிந்து புதிய சாதனை எதிர்மறை அளவை எட்டியுள்ளது. முன்பு 1 டாலருக்கு சுமார் 90,000 ரியால் இருந்த நிலை தற்போது 1,50,000 ரியாலாக (சில சந்தைகளில் இன்னும் அதிகமாக) வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் ஈரான் அரசு இந்திய பாசுமதி அரிசி இறக்குமதிக்கு வழங்கி வந்த சலுகை விலை (28,500 ரியால் ஒரு டாலருக்கு) மற்றும் மானியங்களை முழுமையாக நிறுத்தியுள்ளது.
இதன் விளைவாக இந்தியாவிலிருந்து ஈரானுக்கு அனுப்ப தயாராக இருந்த சுமார் ரூ.2000 கோடி மதிப்பிலான பாசுமதி அரிசி சரக்குகள் சர்வதேச துறைமுகங்களில் தேங்கி உள்ளன. ஏற்றுமதியாளர்கள் புதிய ஏற்றுமதி ஆர்டர்களை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: திராவிட குப்பையை அடுப்பில் போட்டு தீந்தமிழ் பொங்கல் வையுங்கள்... சீமான் விமர்சனம்...!

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உற்பத்தியாகும் 1509 மற்றும் 1718 வகை நீண்ட தானிய பாசுமதி அரிசி ஈரானில் மிகவும் விரும்பப்படுகிறது. இந்நிலையில் இந்த சரிவால் பாசுமதி அரிசி விலை ஏற்கனவே கிலோவுக்கு ரூ.4 வரை குறைந்துள்ளது. நீண்டகாலமாக இந்த நெருக்கடி நீடித்தால் விவசாயிகளுக்கும் விலை குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆல் இந்தியா ரைஸ் எக்ஸ்போர்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் சதீஷ் கோயல் கூறுகையில், “ஈரானுக்கு ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் டன் பாசுமதி ஏற்றுமதி செய்கிறோம். இது இந்தியாவின் மொத்த பாசுமதி ஏற்றுமதியில் 15-16% ஆகும். அமெரிக்கா-ஈரான் பதற்றம், உள்நாட்டு கலவரங்கள், ரியால் மதிப்பு சரிவு ஆகியவற்றால் ஈரான் அரசு பாசுமதி இறக்குமதிக்கான மானியத்தை நிறுத்தியுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் காத்திருப்பு நிலைக்கு சென்றுள்ளனர்” என்றார்.
மேலும் ஒரு ஏற்றுமதியாளர் கூறுகையில், “இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளன. ஈரான் நிலைமை சீராகும் வரை காத்திருக்கிறோம்” என்றார்.
பஞ்சாப் நாட்டின் மொத்த பாசுமதி உற்பத்தியில் 40% பங்கு வகிக்கிறது. இந்த நெருக்கடி நீடித்தால் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மற்றும் அரிசி ஆலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: நாங்க என்ன தீவிரவாதியா? சாப்பிட விட மாட்டீங்களா? அராஜகம்… இடைநிலை ஆசிரியர்கள் கொந்தளிப்பு..!