அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயின் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கு ஈரான் தொடர்புடைய ஹேக்கர்களால் ஊடுருவப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேண்டலா ஹேக் டீம் (Handala Hack Team) எனும் ஹேக்கர் குழு, காஷ் படேலின் தனிப்பட்ட ஜிமெயில் கணக்கிற்குள் நுழைந்து, 2010 முதல் 2019 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மின்னஞ்சல்களை வெளியிட்டுள்ளது.
இவற்றில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகள், அலுவல் ரீதியான தகவல்கள், பயணத் திட்டங்கள், ஹோட்டல் முன்பதிவுகள், வணிக ஒப்பந்தங்கள் போன்றவை அடங்கியுள்ளன. மேலும், அவரது பழைய புகைப்படங்கள், பயோடேட்டா (ரெஸ்யூம்) உள்ளிட்ட தனிப்பட்ட ஆவணங்களும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.

ஹேக்கர்கள் தங்கள் இணையதளத்தில், “எஃப்பிஐயின் பாதுகாப்பான அமைப்புகள் எங்களால் சில மணி நேரங்களில் சாய்ந்துவிட்டன” என்று பெருமிதம் தெரிவித்துள்ளனர். இந்த ஊடுருவல் குறித்து அமெரிக்க நீதித்துறை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். வெளியிடப்பட்ட மின்னஞ்சல்கள் உண்மையானவை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் இடைவிடாது தாக்குதல்! ஐக்கிய அரபு அமீரகத்தில் பதற்றம்! 5 இந்தியர்கள் படுகாயம்!
இருப்பினும், இவை அனைத்தும் பழைய காலத்தைச் சேர்ந்தவை என்றும், அரசு ரகசியத் தகவல்கள் எதுவும் இதில் இல்லை என்றும் எஃப்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்பிஐயின் செய்தித் தொடர்பாளர் பென் வில்லியம்சன், “இந்தச் சம்பவத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தடுக்க அனைத்து அவசிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.
ஹேண்டலா ஹேக் டீம், ஈரான் அரசின் உளவுத்துறையுடன் தொடர்புடையதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். இக்குழு ஏற்கெனவே அமெரிக்க அதிகாரிகளை இலக்காகக் கொண்டு பல “ஹேக் அண்ட் லீக்” நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தற்போது அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான பதற்றம் மற்றும் ஈரான் மீதான போர் நிலைமைகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பின் தலைவரையே குறிவைத்து இத்தகைய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளின் தனிப்பட்ட டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஹேக்கர்கள் இந்தத் தாக்குதலை அமெரிக்க அதிகாரிகளை சங்கடப்படுத்தவும், உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவும் பயன்படுத்த முயல்வதாக பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர். எஃப்பிஐ இதுவரை இந்த விவகாரத்தில் விரிவான கருத்து எதையும் வெளியிடவில்லை.
ஈரான் தொடர்புடைய ஹேக்கர்களின் இந்த நடவடிக்கை, சைபர் போர்க்களத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் இனி தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்குகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் உலக அரங்கில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: ஒரே மேடையில் 5 வேட்பாளர்கள்... அறிமுகம் செய்து வாக்குச் சேகரிக்கும் EPS.. . கலகலக்கும் நெல்லை..!