தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முக்கிய வாதத்தை முன்வைத்தது. ஆளுநர் ஒரு “தபால்காரர்” அல்ல என்றும், அவருக்கு அரசியல் சாசனத்தின் கீழ் முடிவெடுக்கும் முழு அதிகாரம் உள்ளதாகவும், மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படாதவர் என்றாலும், நேரடியாக தேர்வு செய்தவர்களை விட எந்த வகையிலும் குறைவானவர் அல்ல என்றும் மத்திய அரசு தெரிவித்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, மற்றும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் ஆளுநருக்கு உள்ளதாக மத்திய அரசு வாதிட்டது.
இந்த வழக்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டது. உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
மத்திய அரசு, மசோதாக்களுக்கு காலக்கெடு நிர்ணயிப்பது அரசு நிர்வாகத்தில் நீதித்துறையின் தலையீட்டை உருவாக்கும் எனவும், இது குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் வாதிட்டது. மேலும், ஆளுநர்கள் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.
இதையும் படிங்க: ICICI கொண்டு வந்த புது ரூல் விவகாரம்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்..!!

இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் அக்கறை காட்டவில்லை என்று தமிழ்நாடு அரசு பலமுறை குறிப்பிட்டதாகவும், இதனால் நீதிமன்றம் தலையிட வேண்டிய சூழல் உருவானதாகவும் தெரிவித்தது. முன்னதாக, உச்சநீதிமன்றம் ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தது.
இதனிடையே நேற்று நடந்த விசாரணையின்போது, நீதிபதிகள், ‘ஜனாதிபதி சில கேள்விகளுக்கு ஆலோசனை கேட்டிருக்கும்போது தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கு என்ன பிரச்சினை?’ என்று கேள்வி எழுப்பினர். மேலும் ஜனாதிபதி எழுப்பிய ஆலோசனை கேள்விகளை விசாரித்து வருகிறோமே தவிர, தீர்ப்பை மாற்ற மாட்டோம். கருத்து மட்டுமே தெரிவிப்போம்’ என்று தெளிவுப்படுத்தினர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் விசாரணையை இன்றைக்கு (அதாவது புதன்கிழமை) தள்ளிவைத்தது.
இந்நிலையில் இன்று மத்திய அரசு சொன்ன கருத்துக்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் மசோதா செயல் இழந்துவிட்டது என்று கூறுவதை ஏற்க முடியாது. பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசானது, ஆளுநரின் விருப்பபடிதான் செயல்படும் என்பதுபோல் ஆகிவிடும்” என்று கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.
இவ்வழக்கில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அரசியல் சாசனப் பிரிவு 143-ஐப் பயன்படுத்தி 14 கேள்விகளை எழுப்பியுள்ளார். மத்திய அரசு செப்டம்பர் 10-ம் தேதிக்குள் விரிவான பதிலை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு, மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையிலான அதிகார மோதல்களுக்கு முக்கிய தீர்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆளுநர் தேநீர் விருந்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு.. வெளியான பரபரப்பு தகவல்..!!