தமிழக அரசு விமானப் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட விமானச் சேவை நிறுவனங்களின் விமானங்களுக்கு விற்பனை செய்யப்படும் விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரி (வாட்) 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில், சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற விமான நிலையங்களில் இதே எரிபொருள் மீதான வரி 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை 2027 அக்டோபர் 31 வரை ஒரு ஆண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.விமான எரிபொருள் விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவில் பெரும் பங்கை வகிக்கிறது. எனவே இந்த வரிக் குறைப்பு அவற்றின் இயக்கச் செலவைக் குறைத்து, விமானப் போக்குவரத்தை மேலும் போட்டித்தன்மை உடையதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் வரி விகிதம் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் விமான நிறுவனங்கள் சென்னையிலும் பிற தமிழக விமான நிலையங்களிலும் எரிபொருள் நிரப்பும் நடைமுறையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது புதிய விமானப் பாதைகள் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள பாதைகளில் அதிக அதிர்வெண் கொண்ட சேவைகளை இயக்குவதற்கும் உதவும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள இண்டிகோ விமான நிறுவனம், முதல்வர் விஜய்க்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING அடுத்த 48 மணி நேரத்திற்கு திக்...திக்..!! -‘அர்னாப்’புயல் ஆட்டம் ஆரம்பம்... தமிழ்நாட்டை தாக்க வாய்ப்பா?
இதுபோன்ற முற்போக்கான நடவடிக்கைகள் விமானப் போக்குவரத்தை வலுப்படுத்துவதோடு, தமிழகத்தின் சுற்றுலாத் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக அமையும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விமானப் போக்குவரத்து எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாறும் என்ற நம்பிக்கையையும் அது வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பர்லியாரில் பயங்கரம்... மண் சரிவில் சிக்கிய அரசு பேருந்து... பயணிகளின் நிலை என்ன?