வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் தீவிர வானிலை எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, அம்மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்டோபர் 26, திங்கட்கிழமை) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக விட்டுவிட்டு மிதமான மழையும், மலை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. மேலும், நாளை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் பயண சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்திலும் கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் சமவெளிப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (26.10.2026) ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இவ்விரு மாவட்டங்களிலும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும், சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகள் தின SPECIAL..! சாக்லேட் முதல் அன்னாசி வரை… மாணவர்களுக்கு கேக் விருந்து..!
இதையும் படிங்க: சீரழியும் சமூகம்..! கோவையில் போதை மாத்திரை விற்பனை..! 5 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!!