புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ், பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த மார்ச்சில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த நலத்திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு கூடுதலாக சுமார் ரூ.500 கோடி தேவைப்படுகிறது. ஆனால் இதற்கான நிதி அரசிடம் இல்லை. இதனால் அரசின் வருவாயை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் எழுந்துள்ளது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி அரசின் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதிகள் அனைத்திலும் மது பானங்களுக்கான கலால் வரிகளை 100 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் இந்த நிதி ஆண்டு ரூ.350 கோடிக்கு அரசின் வரி வருவாயை அதிகரிக்கும் என அரசு கருதுகிறது. இது 2025-26ம் ஆண்டு பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்த நலத் திட்டங்களுக்கான செலவுகளை சமாளிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உண்மையை உணராத கூட்டம் அவரை எதிர்க்கிறது... கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்!!
அமைச்சரவை முடிவுகளின் அடிப்படையில் கலால் துறையானது மது பாட்டில்களுக்கான விலைகளை உயர்த்தி இன்று அறிவிப்பு வெளியிட்டது. தற்போது மதுபானங்களுக்கான கூடுதல் கலால் வரி விதிப்பு குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சாதாரண குவார்ட்டர் மது பாட்டிலுக்கு ரூ.6 முதல் உயர் ரக பாட்டிலுக்கு ரூ.30 வரை விலை உயர்கிறது. பீர் விலை 5 ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 750 மில்லி லிட்டர் அளவுள்ள மற்ற மது பாட்டில்களின் விலைகள் 24 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்தது.

புதுச்சேரியில் சுற்றுலா துறை வளர்ந்து வருகிறது. சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, மும்பை போன்ற பெரு நகரங்களில் இருந்து புதுச்சேரிக்கு டூரிஸ்டுகள் அதிக அளவு வருகின்றனர். அவர்கள் புதுச்சேரியின் ரெஸ்டோ பார்களில் விரும்பிய மது வகைகளை வாங்கி குடிக்கின்றனர்.
விலை குறைவு காரணமாக புதுச்சேரிக்கு மிக அருகில் உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் புதுச்சேரியில் அதிக அளவு மது அருந்த வருகின்றனர். இவர்களுக்கு இந்த விலை உயர்வு சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும்
இதையும் படிங்க: புதிய நகைக்கடன் நெறிமுறைகள் விவசாயிகளை வஞ்சிக்கும்! நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் கடிதம்...