உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அலிகஞ்ச் பகுதியில் உள்ள மூன்று மாடி வணிக வளாக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் அங்கிருந்த அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட இந்த விபத்தில், பலர் கட்டடத்திற்குள் சிக்கிக்கொண்டதால் மீட்பு பணிகள் கடுமையாக சவாலாக இருந்தன. தீ விபத்துக்குப் பிறகு உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். பின்னர் கட்டடத்தின் சுவர்களை உடைத்து உள்ளே சென்று மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கட்டட உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கட்டடத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி தீ விபத்து எதிரொலி! ஆக்ஷனில் இறங்கிய அரசு! 94 கட்டிடங்கள் இடிப்பு! 114 கட்டிடங்கள் சீல்!

விசாரணையில், கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்த செல்லப்பிராணிகள் விற்பனை நிலையத்தில் முதலில் தீ ஏற்பட்டதாகவும், பின்னர் அது வேகமாக மற்ற தளங்களுக்கு பரவியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கட்டடத்தில் அவசரகால வெளியேறும் வழி (emergency exit) இல்லாதது உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தீயணைப்பு கருவிகள் பொருத்தப்படாததும், கரும்புகை வெளியேறுவதற்கான போதிய வசதி இல்லாததும் உயிரிழப்பை அதிகரித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மின்சார வயரிங் மோசமாக இருந்ததும், ஏசி யூனிட்கள் ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்ததும் தீ விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்து மேலும் ஒரு துயரமான பின்னணியையும் வெளிப்படுத்தியுள்ளது. அந்த கட்டடத்தில் பணியாற்றி வந்த நிலேஷ் மற்றும் அனாமிகா என்ற காதல் ஜோடி, விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், இந்த விபத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நேரத்தில் நிகழ்ந்த இந்த துயரம் குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விபத்து நடந்த கட்டடத்தை இடிக்க லக்னோ மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் நகரங்களில் உள்ள வணிக கட்டடங்களின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் குறித்து வாய்விட்ட பாகிஸ்தான்! வச்சு செய்த இந்தியா! ஐநாவில் காரசார விவாதம்!