இந்தியாவில் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் 45 ஆசிரியர்கள் இந்த மதிப்புமிக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருது, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு, சமுதாயத்தில் அவர்களின் தாக்கம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
தேசிய நல்லாசிரியர் விருது 1958 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், கல்வித்துறையில் சிறந்த பங்களிப்பு செய்த ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ஆரம்ப, இடைநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல், சமஸ்கிருதம், பாரசீகம், அரபு மொழி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு தேசிய விருதுக்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க, மத்திய கல்வி அமைச்சகம் ஒரு கடுமையான தேர்வு செயல்முறையைப் பின்பற்றியது.
இதையும் படிங்க: இந்தியாவில் மீண்டும் டிக் டாக் செயலியா..!! மத்திய அரசு சொன்ன தகவல் என்ன..??
இந்த செயல்முறை பல கட்டங்களைக் கொண்டது. முதலில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பிற கல்வி அமைப்புகளிலிருந்து பரிந்துரைகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் இந்தியாவில் 45 ஆசிரியர்கள் மத்திய அரசு வழங்கும் ஆசிரியர் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை ரேவதி என்பவரும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி என்பவரும் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆளுநர் தபால்காரர் அல்ல, இந்திய பிரதிநிதி.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்..!!