நேஷனல் ஹெரால்டு வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, மத்திய அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு விழுந்த பலத்த அடி என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமலாக்கத் துறை திட்டமிட்டு ஜோடித்த இந்த வழக்கில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
"நேஷனல் ஹெரால்டு வழக்கில் எந்த ஒரு காவல்துறையோ அல்லது புலனாய்வு அமைப்போ முதல் தகவல் அறிக்கை (FIR) கூட பதிவு செய்யவில்லை. அடிப்படை ஆதாரமே இல்லாத ஒரு வழக்கை அமலாக்கத் துறை கையில் எடுத்ததே சட்டவிரோதமானது. பணப்பரிமாற்றம் என்பது ஒரு குற்றமல்ல; அது அன்றாட வாழ்வின் அங்கம். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தால்தான் அது குற்றம். ஆனால், இந்த வழக்கில் அத்தகைய செயலே நடக்கவில்லை என்று நீதிபதி தனது சிறப்பான தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார். புத்திசாலியான அரசு என்றால், இத்துடன் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை மேல்முறையீடு செய்ய நினைத்தால், அவர்களுக்கு இன்னும் புத்தி தெளியவில்லை என்றே அர்த்தம்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியிருப்பதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். "மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதன் மூலம், 77 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தியை மீண்டும் ஒருமுறை கொன்றுவிட்டார்கள். தற்போது வைத்துள்ள பெயர் இந்தியாவா? ஆங்கிலமா? என்பது கூடப் புரியவில்லை. காந்தி மற்றும் நேருவின் நினைவுகளை இந்தியர்களின் மனதிலிருந்து யாராலும் நீக்க முடியாது. அவ்வாறு நினைக்கப்படுபவர்கள் அபத்தமானவர்கள்" என்று மத்திய அரசைச் சாடினார். 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் மீதான வழக்குகளை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் பாஜகவின் வியூகம் தவிடுபொடியாகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறிவருகிறது.
இதையும் படிங்க: "66 லட்சம் பேர் முகவரி இல்லாமல் போனது வியப்பாக இருக்கிறது!" - ப.சிதம்பரம்
இதையும் படிங்க: சூதாட்ட செயலி வழக்கு..!! ரூ.7.93 கோடி சொத்துக்கள் முடக்கம்..!! ED விசாரணை வளையத்தில் பிரபலங்கள்..!!