நாடு முழுவதும் மருத்துவக் கனவுகளை நனவாக்கும் மாணவர்களின் முக்கிய தேர்வான நீட் (NEET-UG) மீண்டும் ஒரு சர்ச்சையின் பிடியில் சிக்கியுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான இந்தத் தேர்வு, லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நுழைவுத் தேர்வாக விளங்குகிறது. உலக அளவில் அதிக மாணவர்கள் பங்கேற்கும் தேர்வுகளில் ஒன்றாக இது உருவெடுத்துள்ள நிலையில், தேர்வு நடைமுறைகளின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற முதல் தேர்வில் சுமார் 22 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஆனால், வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதியானதைத் தொடர்ந்து, மத்திய அரசு மே 12-ம் தேதி தேர்வை ரத்து செய்தது. இந்த முடிவு, நீண்ட நாட்களாக இரவு பகல் பாராமல் உழைத்த மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு சிலரின் தவறால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட சூழல் உருவானது.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேசிய தேர்வு முகமை (NTA) ஜூன் 21-ம் தேதி மறுதேர்வை அறிவித்தது. இம்முறை குறைபாடுகளைத் தவிர்க்க, மத்திய பாதுகாப்புப் படை (CRPF), இந்திய விமானப் படை (IAF) உள்ளிட்டவற்றின் உதவியுடன் வினாத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. அரசு வங்கிகளின் பாதுகாப்பு அறைகளில் சேமிக்கப்பட்டு, 551 இந்திய நகரங்கள் மற்றும் 14 வெளிநாட்டு நகரங்களில் உள்ள 5,440 தேர்வு மையங்களில் 22.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய தேர்வு, கண்காணிப்பு கேமராக்கள், பயோமெட்ரிக் சரிபார்ப்பு, ஜாம்மர்கள் போன்ற நவீன ஏற்பாடுகளுடன் நடைபெற்றது.
இதையும் படிங்க: "நீட் வேண்டாம்"..! கொந்தளிக்கும் மாணவர் அமைப்பினர்..! வீதியில் இறங்கி போராட்டம்..!!

தேர்வுக்கு முன்பே டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வினாத்தாள் கசிந்ததாக ஒரு வீடியோ வைரலானது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பலர் தேர்வு மீண்டும் ரத்தாகிவிடும் என அஞ்சினர். இதற்கு உடனடியாக விளக்கம் அளித்த NTA, “மறுதேர்வு விரிவான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது. சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ முற்றிலும் போலியானது மற்றும் உண்மையற்றது” என எக்ஸ் தளத்தில் தெரிவித்தது. PIB Fact Check அமைப்பும் இதை உறுதிப்படுத்தியது.
மாணவர்களுக்கு தவறான தகவல்களைப் பரப்புவது தீவிர குற்றம் என எச்சரித்த NTA, அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட பக்கங்களை மட்டுமே நம்புமாறு பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. இந்த மறுதேர்வில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைதியான, வெளிப்படையான முறையில் தேர்வு எழுதியதாக NTA அறிவித்துள்ளது. சில இடங்களில் பிராக்ஸி தேர்வு முயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக தேர்வு சீராக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!