அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் உச்சியில் 30 அடி உயரமுள்ள கம்பத்தில் இன்று (நவம்பர் 25) பிரதமர் நரேந்திர மோடி காவிக் கொடியை ஏற்றி வைத்தார். ‘தர்ம துவஜாரோஹணம்’ என்று பெயரிடப்பட்ட இந்த சிறப்பு விழா காலை 11:52 முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்தத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
ராமரின் சூரிய குலத்தை குறிப்பிடும் சூரிய சின்னம், மையத்தில் ஓம், தேவலோக மரமான கோவிதாரா (மந்தாரம் + பாரிஜாதம்) ஆகியவை பொறிக்கப்பட்ட காவிக் கொடி பறக்கத் தொடங்கியதும் சங்கு ஊதப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டனர்.
விழாவுக்கு முன்பு அயோத்தி வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ராமர் கோயில் செல்லும் பாதையில் பிரதமர் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபக்கமும் திரண்ட பக்தர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். கோயிலை அடைந்த பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோருடன் சிறப்பு வழிபாடு நடத்தினார். கோயில் நிர்வாகம் சார்பில் மூவருக்கும் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: Breaking! அயோத்தி ராமர் கோயிலில் காவிக்கொடி! மக்கள் வெள்ளத்தில் மோடி!! உ.பி-யில் விழாக்கோலம்!!

கொடி ஏற்றிய பிறகு பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “140 கோடி இந்தியர்களின் கவுரவமான அயோத்தி ராமர் கோயில் இன்று பிரமாண்டமாக உருவாகியுள்ளது. பல தடைகளை உடைத்து இதை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு உ.பி. மக்களும் ராம பக்தர்களும் நன்றி தெரிவிக்கின்றனர். அயோத்தியை உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் நகரமாக மாற்றியவர் மோடி” என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “ஏராளமான பக்தர்களின் கனவு இன்று நிறைவேறியுள்ளது. இந்தக் கோயிலுக்காக உயிர் துறந்த அனைவரின் ஆத்மாவும் இன்று சாந்தி அடையும். அசோக் சிங்காலின் கனவு பலனளித்தது. இன்று அயோத்தியில் ராம ராஜ்ஜியத்தின் கொடி பறக்கிறது. தர்மத்தின் கொடி பறக்கிறது. உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் வளர்ச்சி பெற்ற பாரதத்தை உருவாக்க வேண்டும்” என்று உருக்கமாகப் பேசினார்.

இந்த விழா, ராமர் கோயிலின் சாஸ்திரப்படியான கட்டுமானப் பணிகள் முழுமையடைந்ததற்கான அடையாளமாகவும், இந்தியாவின் சமய மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியின் முக்கிய நாளாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Breaking! அயோத்தி ராமர் கோயிலில் காவிக்கொடி! மக்கள் வெள்ளத்தில் மோடி!! உ.பி-யில் விழாக்கோலம்!!