புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் மாநாட்டை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி 72 மணி நேரத்தில் உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் 15 இருதரப்பு சந்திப்புகளை நடத்தியுள்ளார். ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடனான இந்த பேச்சுவார்த்தைகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.
பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு இடையே, பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புகளில் இருதரப்பு உறவுகள் மட்டுமின்றி, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்துவது, எரிசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறை சார்ந்த உறவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. உக்ரைன் விவகாரம் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபருக்கு என்ன ஆச்சு?! பேச்சை நிறுத்திய மோடி! உலக தலைவர்கள் கவனம் ஈர்த்த தருணம்!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் முக்கிய இடம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் இந்தியா-ஈரான் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இதனிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான மோடியின் சந்திப்பு சர்வதேச அளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா-சீனா எல்லையில் அமைதியை நிலைநிறுத்துவது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மலேசியா, எத்தியோப்பியா, தென் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையும் மோடி சந்தித்துள்ளார். மொத்தமாக 72 மணி நேரத்தில் 15 இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் சந்திப்புகள் மூலம் பிராந்திய அமைதி, தடையற்ற கடல்சார் வர்த்தகம் மற்றும் உலக தெற்கு நாடுகளின் நலன்கள் தொடர்பாக இந்தியா தனது நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருவது வெளிப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!