தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள 400 ஏக்கர் நிலத்தை அரசு சமன்படுத்தி அதனை ஏலம் விட்டு சர்வதேச நிறுவனங்களை கொண்டு வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலம் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்திற்கு சொந்தமானது என மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மேலும் அந்த 400 ஏக்கர் நிலத்தில் மயில், மான், நரி உள்ளிட்ட பல்லுயிரினங்கள் வாழும் பகுதியாக இருப்பதாகவும், அதனை அழிப்பதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் என்றும் 400 ஏக்கர் நிலத்தில் 734 தாவர இனங்கள், 220 பறவை இனங்கள், நட்சத்திர ஆமைகள், புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றிகள் மற்றும் முயல்கள் ஆகியவை அவற்றின் வாழ்விடத்தை இழக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதற்காக ஐதாராபாத் மத்திய பல்கலைக்கழக நிலங்களை ஏலம் விடுவதற்கு எதிராக மாணவர் போராட்டங்கள் தொடர்கின்றன. வகுப்புகளைப் புறக்கணித்துள்ள மாணவர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர் அம்பேத்கர் ஆடிட்டோரியத்திலிருந்து கிழக்கு வளாகம் வரை பேரணி நடத்தினர். ஒருபுறம் மாணவர்களின் மிகப்பெரிய பேரணி நடந்தாலும், மறுபுறம் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் வளாகத்தில் பதட்டமான சூழல் நிலவியது. இந்நிலையில் திடீர் என மாணவர்களை போலீசார் லத்தி சார்ஜ் செய்து கலைத்தனர்.
இதையும் படிங்க: ஆளில்லா நேரத்தில் அத்துமீற முயற்சி.. தாய், குழந்தையை கொன்ற காமுகனுக்கு 15 ஆண்டு கடுங்காவல்..!

இருப்பினும் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த நான்கு நாட்களாக போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் அரசு நில விற்பனையை திரும்பப் பெற வேண்டும். இது குறித்து தெளிவான அறிக்கை வெளியிடப்பட வேண்டும். 400 ஏக்கர் நிலத்தை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிகின்றனர். ஆனால் மறுபுறம், அரசு அந்த நிலங்களில் ஜேசிபிகள் உதவியுடன் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள அனைத்து வாயில்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டனர். பல்கலைக்கழகத்திற்குள் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதற்கிடையில் முன்னாள் அமைச்சரும் பிஆர்எஸ் எம்எல்ஏவுமான ஹரிஷ் ராவ், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு எதிரான லத்தி சார்ஜ் வன்மையாகக் கண்டிப்பதாக ட்வீட் செய்துள்ளார். இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் நடந்த அவசர நிலையை நினைவூட்டுவதாக ரேவந்த் ரெட்டி அரசு செயல்படுவதாக விமர்சித்தார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் வெளியிட்டுள்ள வீடியோவில், மாணவர்களின் போராட்ட இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையே அந்த நிலங்கள் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமானவை அல்ல. அரசாங்கத்திற்கு சொந்தமானது என துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா கூறினார். எல்லோரும் 400 ஏக்கர் நிலம் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இடத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் சந்திரபாபு நாயுடு அரசு அதைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஐ எம்ஜியிடம் ஒப்படைத்தது. அந்த 400 ஏக்கருக்குப் பதிலாக அதே பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள கோபன்பள்ளியில் 397 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் ஒதுக்கியது.

இதற்காக பல்கலைக்கழக அதிகாரிகள் இடமாற்ற நடைமுறையில் கையெழுத்திட்டுள்ளனர். மக்கள் உண்மையான நிலைமையை அறிந்து கொள்ள வேண்டும். அங்கு சர்வதேச மென்பொருள் நிறுவனத்தை கொண்டு வர அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக நிலங்களில் மேம்படுத்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 400 ஏக்கர் பல்கலைக்கழக நிலங்களை அரசு அபகரிக்கவில்லை என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி- யோகிக்கு கொலை மிரட்டல்.. கம்ரான் கானுக்கு நீதிமன்றம் பரபர தீர்ப்பு..!