இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களில், 233 பேர் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், மீதமுள்ள 12 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இந்த நியமனங்கள், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை சட்டமியற்றும் செயல்பாட்டில் ஈடுபடுத்துவதற்கு உதவுகின்றன.
இந்த நிலையில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களாக (Nominated MPs) நான்கு பேரை அறிவித்தார், இது இந்திய அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. இந்த நியமனங்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 80(1)(a) இன் கீழ், கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை, மற்றும் பொது நிர்வாகத்தில் சிறப்பு பங்களிப்பு அளித்தவர்களை மாநிலங்களவையில் உறுப்பினர்களாக நியமிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.
இந்த முறை, மாநிலங்களவையில் மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத, ஆனால் நாட்டின் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்குவதற்கு வழிவகுக்கிறது. இந்த நியமனத்தில் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்கிளா, உஜ்வால் தியோராவ் நிகாம், சதானந்தன் மாஸ்டர், மற்றும் மீனாக்ஷி ஜெயின் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ரிதன்யா தற்கொலை வழக்கு.. ஐ.ஜியிடம் முக்கிய ஆதாரத்தை கொடுத்த ரிதன்யாவின் தந்தை..!

புதிய எம்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ள நால்வரும் அவரவர் துறைகளில் செய்த பணிகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம். ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, 2020 முதல் 2022ம் ஆண்டு வரை மத்திய வெளியுறவு துறை செயலாளராக பதவி வகித்தார். அதற்கு முன்பு, 2 ஆண்டுகள் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்தார். வங்கதேசம், தாய்லாந்து நாடுகளுக்கான தூதராகவும் பதவி வகித்துள்ளார். சர்வதேச விவகாரங்களில் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவின் நிபுணத்துவத்தை கவுரவிக்கும் வகையில் அவருக்கு எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு இந்தியாவில் நடந்த G20 மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் ஷிரிங்லா இருந்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் அவர் பாஜவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் ஷ்ரிங்லா போட்டியிடுவார் என உறுதியாக கூறப்பட்டது. அதனால், டார்ஜிலிங்கில் நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். ஆனால், அவர் என்ன காரணத்தாலோ திடீரென பாஜவில் ஐக்கியமாவதை தவிர்த்தார். ஆனாலும் அவருக்கு மத்தியஅரசு நியமன எம்பி பதவி வழங்கி கவுரவித்துள்ளது.
உஜ்வல் நிகம் ஒரு சட்ட நிபுணர். இந்தியாவை உலுக்கிய 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றியவர். உயிருடன் பிடிபட்ட லஷ்கர் பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை வாங்கித் தந்தவர். T-Series டிசீரிஸ் இசை பதிவு நிறுவன அதிபர் குல்ஷன்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பிரேமாத் மகாஜன் போன்ற பரபரப்பான கொலை வழக்குகளிலும் அவர் அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உதவிய குழுவில் உஜ்வாம் நிகம் அங்கம் வகித்தார்.
2016 இல் பத்மஸ்ரீ விருது பெற்றார். 2024 லோக்சபா தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் பாஜ வேட்பாளராக உஜ்வால் நிகம் போட்டியிட்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய நிலையில், இப்போது ராஜ்ய சபா நியமன எம்பியாக ஆகியுள்ளார். டாக்டர் மீனாட்சி ஜெயின் டெல்லியின் கார்கி கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஆவார். இவர் 2020ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர். இவர், பிரபலமான அரசியல் திறனாய்வாளர் ஆவார். 2014ல் மோடி பிரதமர் ஆனதும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பினராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். டாக்டர் மீனாட்சி ஜெயின், டைம்ஸ் ஆஃப் இந்தியா முன்னாள் ஆசிரியர் கிரிலால் ஜெயினின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் சதானந்தன் கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர். மாஸ்டர் என அன்புடன் அழைக்கப்படும் சதானந்தன், கல்வி மற்றும் பொது வாழ்க்கையில் செய்த சேவைகளை பாராட்டும் விதமாக இப்போது ராஜ்ய சபா எம்பி ஆக்கப்பட்டுள்ளார். வாலிப வயதில் மார்க்சிஸ்ட் கட்சி மீது பற்றுதலுடன் இருந்தார்.அதன் பிறகு, ஆர்எஸ்எஸ்சில் இணைந்தார். பாஜவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள்,
சதானந்தன் வீட்டுக்கு சென்று அவரது 2 கால்களை வெட்டி ரோட்டோரத்தில் வீசி விட்டு சென்றனர். 1994 ல் இந்த கொடூர சம்பவம் நடந்தபோது, சதானந்தனுக்கு வயது 30.
2 கால்களை இழந்தபிறகும் 1999 ம் ஆண்டில் மீண்டும் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். நாளடைவில் பாஜவில் இணைந்து தேர்தல்களிலும் போட்டியிட்டார். பொது வாழ்க்கையில் ஈடுபட்டதற்காக தனிப்பட்ட முறையில் பல சவால்களை சந்தித்த
மாஸ்டர் சதானந்தனுக்கு எம்பி பதவியை வழங்கி அழகுபார்த்திருக்கிறது, மத்திய அரசு. நியமன எம்.பி.க்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். நியமனம் செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு கட்சியில் சேரலாம் அல்லது எந்த கட்சியையும் சாராத நியமன எம்பியாக தொடரலாம்.
வழக்கமாக நியமன எம்பிக்கள் அரசுக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள். 240 எம்பிக்களை கொண்ட ராஜ்ய சபாவில் பாஜவுக்கு 135 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. 12 நியமன எம்பிக்களும் இதில் அடங்குவர்.
இதையும் படிங்க: வடகொரியாவுக்கு ஸ்கெட்ச்! தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா அதிரடி!! களமிறங்கும் ரஷ்யாவால் அதிகரிக்கும் பதற்றம்!