இந்தியாவில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார்கள், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், தேர்தல் செயல்முறைகளின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: வீரியம் எடுக்கும் வாக்குத்திருட்டு! அடுத்தடுத்து போர் கொடி தூக்கும் மாநிலங்கள்... ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்குகளைத் திருடுவதாகவும், இதற்கு "100% ஆதாரங்கள்" தங்களிடம் இருப்பதாகவும் கூறினார். இந்த முறைகேடுகள், தேர்தல் ஆணையத்தின் உயர் மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் பாஜகவின் ஆதரவுடன் செயல்படுவதாகவும், இது தேசத்துரோக செயலாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அடுத்த கட்ட வாக்குத்திருட்டு தொடர்பான பட்டியலை வெளியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
எவ்வளவு வாக்குகள் திருடப்பட்டுள்ளது என்பதை விளக்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாகவும் 48 தொகுதிகளிலும் வாக்குத்தெட்டு நடந்துள்ளது என்பதற்கான ஆதாரத்தை வெளியிடவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே, வாக்கு திருட்டு தொடர்பாக புதிய வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. வாக்குகள் எப்படி திருடப்படுகிறது என்பதை விளக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
உங்கள் வாக்குகள் திருடப்படுகிறது என்ற கோஷத்துடன் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. திருடப்படுவது உங்கள் வாக்குகள் மட்டுமல்ல உங்கள் உரிமை மற்றும் அடையாளம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராகுலுக்கு எத்தன தடவ சொல்றது? நீங்கலாச்சு பொறுப்பா நடந்துக்கங்க ஸ்டாலின்.. நயினார் விமர்சனம்..!