ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்குக் கிர்கிஸ்தான் அரசு மற்றும் இந்தியத் தூதரகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாளை (ஏப்ரல் 28) நடைபெறவுள்ள இந்த உயர்மட்டக் கூட்டத்தில், பிராந்திய பாதுகாப்பு சவால்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, மேற்கு ஆசியாவில் நிலவி வரும் தற்போதைய புவிசார் அரசியல் சூழல் மற்றும் அதன் உலகளாவிய பாதிப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஷ்கெக் நகருக்குப் புறப்படுவதற்கு முன் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், 'உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில், அமைதிக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை இந்தக் கூட்டத்தில் எடுத்துரைப்பேன். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா பின்பற்றி வரும் சகிப்புத்தன்மையற்ற (Zero Tolerance) கொள்கையை மீண்டும் வலியுறுத்துவேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!
இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் ராஜ்நாத் சிங் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். 2001-இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இந்தியா 2017-இல் முழு உறுப்பினராக இணைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில், பிராந்திய நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்தவும் ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பதவிப் பறிப்புப் படலம்: அதிருப்தி எம்.பி-க்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் ஆம் ஆத்மி!