ஆக்சியம்-4 (Ax-4) விண்வெளி திட்டம், நாசா, ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவை உள்ளடக்கிய ஒரு தனியார் விண்வெளி பயணமாகும். இந்த திட்டம் கடந்த ஜூன் 25ம் தேதி புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியாவின் மற்றொரு மைல்கல் பயணமாக, 1984ல் ராகேஷ் ஷர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்ற இரண்டாவது இந்தியராக சுக்லா பதிவு செய்யப்பட்டார்.

மேலும் சுபான்ஷு முதல் இந்தியராக ISS-ஐ அடைந்தார். இந்த பயணம், NASA, SpaceX, மற்றும் Axiom Space இணைந்து நடத்திய தனியார் பயணமாகும், இதற்கு இந்திய அரசு சுமார் ₹548 கோடி செலவு செய்தது. ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம், கிரேஸ் என்ற டிராகன் விண்கலத்தில், கடந்த ஜூன் 25ம் தேதி காலை 12:01 மணிக்கு (IST) புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பயணம் தொடங்கியது. ஜூன் 26 அன்று மாலை 4:01 மணிக்கு (IST) ISS-இல் விண்கலம் இணைந்தது.
இதையும் படிங்க: இந்தியாவின் விருப்பங்களை உச்சத்திற்கு எடுத்து சென்ற சுக்லா.. பெருமிதத்துடன் வாழ்த்திய ராஜ்நாத் சிங்..!
சுபான்ஷு, ISS-இல் 14 நாட்கள் தங்கி, 60-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டார். நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 433 மணி நேரம் செலவழித்தனர். இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் பூமிக்குத் திரும்பும் பயணத்தை திங்கள்கிழமை மாலை 4:45 மணிக்கு (இந்திய நேரப்படி) ’ஆக்ஸியம்-4’ குழுவினர் தொடங்கினர். சுமார் 22.5 மணி நேர பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் கலிஃபோர்னியா அருகே கடல்பகுதியில் பாராசூட் உதவியுடன் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தரையிறங்கினர்.
விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம் நேற்று மதியம் வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து, டிராகன் விண்கலத்தில் உள்ள 2 சிறிய 'டுரோக்' பாராசூட்டுகள் பூமிக்கு மேல் சுமார் 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் கலிபோர்னியா கடலின் மேல் பகுதியில் திறக்கப்பட்டது. அதன்பின், 4 பெரிய பாராசூட்டுகள் விரிந்து பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது.

அதன்பின், 10 நிமிடங்களில் ஸ்பேஸ் எக்ஸின் மீட்புக் கப்பல் விண்கலத்தை அடைந்தது. விண்கலத்தில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றனர். 18 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 4 வீரர்களும் இருந்ததால் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் சோர்வாக இருப்பதை களைவதற்கு அவர்களுக்கு தசை அழுத்தம், மனோ திட பயிற்சி 7 நாட்கள் அளிக்கப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்தது. என் மீதும், என் பணியின் மீதும் ஆர்வம் காட்டிய அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி என்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று பூமி திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என் புள்ள பத்திரமா வந்துட்டான்!! கேக் வெட்டி கொண்டாடிய சுபான்ஷு சுக்லா பெற்றோர்!