சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நக்சலைட்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசின் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுப்படி, இந்த ஆண்டு துவக்கம் முதலே நக்சல்களுக்கு எதிரான வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அதன் படி, அடர்ந்த வனப்பகுதி, மலைகளில் பதுங்கியுள்ள நக்சல்களை ஒடுக்குவதற்காக சிஆர்பிஎப் மற்றும் சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் நக்சல்களை ஒடுக்கும் வேட்டையில் இதுவரை 54 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 84 பேர் சரண் அடைந்துள்ளனர். நக்சல் இயக்க தலைவன் பசவராஜ் கொல்லப்பட்டதின் மூலம், நக்சல்களுக்கு ஏதிரான சண்டையில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளோம் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க: நக்சல் தலைவன் தலைக்கு ரூ.1.5 கோடி சன்மானம்..! பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் சிக்கிய முக்கிய தல!
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள லதேஹர் மாவட்டத்தில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் என்ற நக்சல் அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

அதில் ஒருவன் ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா. மற்றொருவன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த பிரபாத் கஞ்சு என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நக்சல்கள் வேட்டையில் வீர மரணம் அடைந்த இரு கமாண்டோக்கள் உட்பட ஏழு சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு ராணுவத்தின் உயரிய கவுரவமான 'சவுரிய சக்ரா' விருது அளிக்கப்பட்டது.

நக்சல்கள் ஆதிக்கம் மிகுந்த சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள டெக்கல்குடியம் என்ற இடத்தில், 2024 ஜன., 30ல் சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 150வது பட்டாலியன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது, ஏவுகணைகள் போன்ற அதி சக்தி வாய்ந்த, கையெறி குண்டுகளின் குவியல்களை நக்சல்கள் அடுத்தடுத்து வெடிக்க செய்தனர்.இந்த சண்டையில், சி.ஆர்.பி.எப்., படையின் கோப்ரா கமாண்டோ படை கான்ஸ்டபிள்கள் பவன் குமார் மற்றும் தேவன் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.

ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில், 2023, ஏப்., 3ல் நடந்த நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் வீர தீரத்துடன் செயல்பட்ட சி.ஆர்.பி.எப்., வீரர்களான துணை கமாண்டன்ட் விக்ராந்த் குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெப்ரி ஹமிங்கல்லொ ஆகியோருக்கும் சவுரிய சக்ரா விருது அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது. வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர் விருதை பெற்றுக் கொண்டனர்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் பிறந்தது விடியல்..! நக்சல் ஒழிப்பால் 17 கிராமங்களுக்கு கிடைத்த பரிசு..!