ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியான கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஹார்முஸ் பாதுகாப்பிற்கு எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை; அமெரிக்கா உலகின் வலிமையான தேசம் என அவர் முழங்கியுள்ளார்.
கூட்டுப் பாதுகாப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்கும் நேட்டோ அமைப்பின் நாடுகள், தற்போதைய நெருக்கடியான நேரத்தில் அமெரிக்காவிற்கு உதவ முன்வரவில்லை என டிரம்ப் குற்றம் சாட்டினார். நாங்கள் எப்போதும் நேட்டோ நாடுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறோம், ஆனால் எங்களுக்கு ஒரு தேவை என வரும்போது அவர்கள் பின்வாங்குகிறார்கள் என அவர் சாடினார்.

நாங்கள் ஈரானின் ராணுவக் கட்டமைப்பை ஏற்கனவே 100% சிதைத்துவிட்டோம். தற்போதைய நிலையில் ஹார்முஸ் நீரிணையை எங்களாலேயே திறக்க முடியும். நேட்டோ உறுப்பினர்கள் உதவவில்லை என்றாலும் கவலையில்லை, நாங்கள் ஒருவரே இதனைச் செய்து முடிப்போம் என அவர் தனது எக்ஸ் (X) மற்றும் ட்ரூத் சோஷியல் தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நான் உயிருடன் தான் இருக்கிறேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
இந்த நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெயில் 90% சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் செல்கிறது. அமெரிக்காவிற்கு இதிலிருந்து வெறும் 1% எண்ணெய் மட்டுமே கிடைக்கிறது. உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் பாதையை நீங்களே பாதுகாக்காமல், அமெரிக்கா வர வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
குறிப்பாக பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆரம்பத்தில் தனது விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்ப மறுத்ததைக் குறிப்பிட்டு, பிரிட்டன் ஒரு முக்கிய நட்பு நாடு என்று கருதப்பட்டது, ஆனால் சரியான நேரத்தில் அவர்கள் உதவவில்லை; இதனை நாங்கள் நினைவில் கொள்வோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் போர் 3-வது வாரமாகத் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்தத் தனித்து இயங்கும் (Unilateral) போக்கு சர்வதேச அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!