அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, ரூ.15,000-க்கு டி.டி எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முதல் நாளான கடந்த திங்கள் கிழமை ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஆராவாரத்துடன் வந்து தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். மேள தாளம் முழங்க, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போல் வேடமணிந்த கலைஞர்களை அழைத்து வந்து தடபுடலாக விருப்ப மனு தாக்கல் நடைபெற்றது.
விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யும் பலரும் தங்கள் பெயரில் ஒரு விருப்ப மனு தாக்கல் செய்வதுடன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் ஒரு விருப்ப மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள். முதல் நாளில் 1,300 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்த நிலையில், அடுத்த நாளே அது 64 ஆக குறைந்து போனதைக் கேள்விப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செம்ம டென்ஷன் ஆகிவிட்டாராம்.
இதையும் படிங்க: ஒட்டுமொத்த திமுகவுக்கும் நேரம் நெருங்கிடுச்சு... அதிமுக கடும் விமர்சனம்...!
கடந்த முறை தேர்தலின் போது 8 ஆயிரத்து 241 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. எனவே இந்த வருஷம் விருப்ப மனுக்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து விட வேண்டும் என அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களைக் கூப்பிட்டு லெப்ட், ரைட் வாங்கிய எடப்பாடி பழனிசாமி, அதனை ஸ்ட்ரிக்ட் உத்தரவாகவும் போட்டிருக்கிறார்.
இதனையடுத்து தான், வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து அதற்கான 234 விருப்ப மனுக்களை இன்று அதிமுக ஐடி விங் உள்ளிட்ட சார்பு அணிகள் சார்பில் போட்டி, போட்டிக்கொண்டு விருப்ப மனுக்களை வாங்கி தாக்கல் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின் மீது அதிமுகவினருக்கு நம்பிக்கை இருந்தாலும், பாஜகவுடனான கூட்டணி இந்த தேர்தலில் கைகொடுக்குமா? என்ற சந்தேகமே விருப்ப மனுத்தாக்கலில் எதிரொலிப்பதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: செவிலியர்களை விடுவிக்கணும்... வாக்குறுதியை நிறைவேற்ற EPS வலியுறுத்தல்...!