திரைப்படங்களில் வருவது போல் குமரி மாவட்டம் தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் புகுந்து பத்திர பதிவை தடுத்து நிறுத்தியதோடு பத்திர பதிவு செய்ய வந்த
திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்.பத்திர பதிவு அலுவலக பொருட்கள் அடித்து உடைப்பு. இது தொடர்பாக ஆரல்வாய்மொழி அதிமுக பேரூராட்சி தலைவர் உட்பட பத்து பேர் மீது வழக்கு பதிவு.
திமுக முன்னாள் எம்பி ஞானதிரவியம் மகன் சேவியர் செல்வராஜா.இவருக்கு சொந்தமான நிலம் ஆரல்வாய்மொழி பேரூராட்சி பகுதியில் உள்ளது. இந்த நிலம் தொடர்பான பத்திர பதிவுக்காக நேற்று தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சேவியர் செல்வராஜா வந்துள்ளார். இந்நிலையில் திடிரென அங்கு வந்த ஆரல்வாய்மொழி பேரூராட்சி அதிமுகவை சேர்ந்த முத்துக்குமார் அலுவலகத்திற்குள் சுமார் பத்து நபர்களுடன் அத்துமீறி உள்ளே புகுந்து சேவியர் செல்வராஜா விற்கு பத்திர பதிவு செய்ய கூடாது என பத்திர பதிவு அலுவல அதிகாரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் முறையான ஆவணங்கள் கொண்டு வந்துள்ளார் அதனால் பத்திர பதிவை தடுக்காதீர்கள் என அதிகாரி கூறியதோடு பத்திரங்களையும் முறைப்படி பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் அதிகாரியிடம் கடும் வாக்குவாதம் செய்ததோடு அவருடன் வந்த நபர்கள் அலுவலக பொருட்களையும் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மம்தா–கனிமொழி சந்திப்பு: 2029 லோக்சபா தேர்தலுக்கு திமுக போடும் கணக்கு? தேசிய அரசியலில் புதிய திருப்பம்!
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலிஸார் பத்திர பதிவு அலுவலகத்தில் இருந்து முத்துக்குமார் உள்ளிட்ட நபர்களை வெளியேற்றினார்கள். இதனிடையே ஆரல்வாய்மொழி பேரூராட்சி பகுதியில் தனக்கு சொந்தமாக உள்ள நிலத்தின் ஒரு பகுதியாக ஐந்து ஏக்கர் நிலத்தை தனக்கு இலவசமாக தர வேண்டும் இல்லையென்றால் எந்த விதமான பத்திர பதிவும் செய்ய விடமாட்டேன் என கூறியதோடு தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறியுள்ளார்.
ஆகையால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியர் இதில் தலையிட்டு முத்துக்குமாரிடம் இருந்து எனக்கு உயிர் பாதுகாப்பு தந்து உதவ வேண்டும் என சேவியர் செல்வ ராஜா ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் மற்றும் பத்து பேர் மீது ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.100 கோடி மோசடி விவகாரம்... இன்று ஆஜராகும் அன்பில் மகேஷ்..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!