தமிழ்நாட்டில் உள்ள ஆறு எம்பிகளின் பதவி காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த சூழலில் மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணயம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஜூன் 9ஆம் தேதியே மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் ஷல்மா மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஆகியோரை அறிவித்தது. அதிமுகவிடம் இருந்து எப்படியாவது ஒரு எம்.பி. சீட்டை வாங்கி விட வேண்டும் என தேமுதிகவும், பாமகவும் போட்டி போட்டு வந்தன.

ஆனால் தேமுதிகவிற்கு வாக்கு வங்கி குறைந்துவிட்டதையும், பாமகவில் நிலவி வரும் அப்பா, மகன் பஞ்சாயத்தையும் வைத்து கணக்கு போட்ட எடப்பாடி பழனிசாமி இரண்டு சீட்டுகளையும் அதிமுகவினருக்கே ஒதுக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கூட்டணிக்குள் தேமுதிக, பாமகவை தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருகிறார், குறைந்தபட்சம் கடந்த முறை வாக்கு கொடுத்தது போல் தேமுதிகவிற்கு சீட் கொடுத்துவிடுவார் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பியது.
இதையும் படிங்க: சின்ன புத்தி கொண்டவர்கள் எண்ணம் தவிடு பொடியானது..! அண்ணா பல்கலை. வழக்கு தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு..!

ஆனால் இரு தினங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் இன்பத்துறை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக தலைவர் தனபால் ஆகியோரை மாநிலங்களை வேட்பாளர்களாக அறிவித்தார். அடுத்த மாநிலங்களவை தேர்தலில் நிச்சயம் தேமுதிகவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் இதில் அதிருப்தியில் உள்ள தேமுதிக இப்போதே திமுகவிடம் சுமூகம் காட்ட ஆரம்பித்துவிட்டது.

தேமுதிக நிலைப்பாடு இப்படி என்றால், பாமகவிற்கு சீட் ஒதுக்காததை எண்ணி அதிமுகவினரே அதிருப்தியில் இருக்கிறார்களாம். கடந்த முறை மாநிலங்களவை பதவியை பாமக தலைவர் அன்புமணிக்கு அதிமுக ஒதுக்கியது. இந்த முறையும் அவருக்குதான் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு எம்பிபதவியும் அதிமுகவிற்கே ஒதுக்கப்பட்டது. முன்னதாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், வடதமிழ்நாட்டில் பாமகவின் வாக்கு வங்கி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2021 தேர்தலில், சேலம், தர்மபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமான இடங்களை வென்றோம். வடதமிழ்நாட்டில் பல தொகுதிகளில் கடுமையான போட்டியை திமுகவிற்கு கொடுத்தோம். இந்த முறை இந்த கூட்டணியில் பாமக்க வந்தால், வடதமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை அதிமுகவால் கொடுக்க முடியும். அன்புமணிக்கு எம்.பி. பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவரது பதவியை அவருக்கே மீண்டும் கொடுத்திருந்தால் 2026 தேர்தலில் குறைவான இடங்களுக்கு பாமகவை வளைத்து போட்டிருக்கலாம். ஆனால் இப்போது நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாக அதிமுகவினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மலிவான அரசியல் செய்யும் ஒரே சார் "பழனிச்சாமி SIR" தான்..! இபிஎஸ் விமர்சனத்திற்கு ரகுபதி பதிலடி..!