அ.தி.மு.க.வில் உட்கட்சி குழப்பம், சரியான கூட்டணி அமையாத நிலை ஆகியவை காரணமாக, வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற நம்பிக்கையை மாவட்ட செயலர்கள் இழந்து வருவதாகக் கட்சி உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி பா.ஜ.க.வுடன் கூட்டணி அறிவித்த பின்னர், ஏழு மாதங்களாகியும் புதிய கட்சிகள் எதுவும் இணையவில்லை. த.வெ.க.வின் பொதுக்குழு தீர்மானம் விஜய் கூட்டணிக்கு வரமாட்டார் என உறுதிப்படுத்தியதால், கடைசி நம்பிக்கையும் தகர்ந்துள்ளது. இதனால், கட்சியின் எதிர்காலம் குறித்து அ.தி.மு.க.வினரிடம் அச்சம் நிலவுகிறது.
நவம்பர் 5 ஆம் தேதி, த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் “தி.மு.க. – த.வெ.க. இடையேதான் போட்டி; விஜய்தான் முதல்வர் வேட்பாளர்” எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நாளில், சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: ஒரு நாளைக்கு 40 முதல் 50 வீடுகள் டார்கெட்! ஒருவாரம், 10 நாளில் முடிஞ்சிடும்! SIR வியூகம் இதுதான்!
கூட்டத்தில் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) பேசுகையில், “வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் தி.மு.க. முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது; அதைத் தடுத்து நிறுத்துங்கள். வரும் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்போம்” என நம்பிக்கை ஊட்டினார். ஆனால், கூட்டம் முடிந்து வெளியே வந்த மாவட்ட செயலர்கள் உற்சாகமிழந்து காணப்பட்டனர்.
மாவட்ட செயலர்கள் தெரிவித்த கருத்துகள்:
“கடந்த 2011 சட்டசபைத் தேர்தலுக்கு முன், தி.மு.க. ஆட்சி மீது பெரிய எதிர்ப்பு இல்லாத நிலையிலும், ஜெயலலிதா அனைவரையும் அரவணைத்து வெற்றி பெற்றார். முத்துசாமி கட்சியை விட்டு வெளியேறியபோது கடிதம் எழுதி அழைத்தார்.

தனக்கு விருப்பமில்லாவிட்டாலும் தி.மு.க.வைத் தோற்கடிக்க தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் இப்போது தலைகீழ் நிலை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஒருங்கிணைப்புக்கு குரல் எழுப்பினாலும், பழனிசாமி ஏற்க மறுக்கிறார். அவர்களால் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் மறுக்கிறார்.”
“த.வெ.க. கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை இருந்தது. பொதுக்குழு தீர்மானத்தால் அது போய்விட்டது. இனி பா.ம.க. (அன்புமணி பிரிவு) உடன் மட்டுமே வாய்ப்பு. அது எந்தளவுக்கு வெற்றி தரும் எனத் தெரியவில்லை. பா.ம.க. பிளவுபட்டுள்ளது; தே.மு.தி.க. தி.மு.க.வுடன் பேசுகிறது; நாம் தமிழர் தனித்துப் போட்டியிடுகிறது.
வழக்கமாக பழனிசாமி தலைமை அலுவலகம் வரும்போது, சென்னை சுற்றியுள்ள பிரமுகர்கள் கூடி வரவேற்பர். இப்போது அந்த எண்ணிக்கை சொற்பமாகிவிட்டது. கட்சியின் எதிர்காலத்தை நினைத்தாலே பதற்றமாக இருக்கிறது” என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் முதல் பா.ஜ.க.வுடன் கூட்டணி அறிவித்தாலும், புதிய கட்சிகள் எதுவும் இணையவில்லை. விஜய் கூட்டணிக்கு வருவார் என பழனிசாமி சூசகமாகக் கூறியிருந்தார். ஆனால் த.வெ.க. தீர்மானம் அதை முறியடித்தது. உட்கட்சி பிளவு, நீக்கங்கள், ஒருங்கிணைப்பு மறுப்பு ஆகியவை கட்சியை பலவீனப்படுத்துவதாக மாவட்ட செயலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 2026 தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.வின் கூட்டணி உத்தி மற்றும் உள் ஒற்றுமை கேள்விக்குள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவோ? தவெகவோ? நமக்கு 125 சீட்டு கன்பார்ம்!! தொகுதிகள் எவை எவை? காங்கிரஸில் தேர்தல் பணிகள் ஜரூர்!