பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்கிற கே. தாமோதரன் உடல்நலக்குறைவால் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேலாண்மைத் துறையில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞர் இவர்தான். ஆரம்பக் காலத்தில் உணவகங்களில் பாத்திரம் கழுவும் பணியில் தொடங்கிய அவர், கடின உழைப்பால் உயர்ந்து பத்மஸ்ரீ விருதும் கின்னஸ் உலக சாதனையும் பெற்றார். 2010ஆம் ஆண்டு 24 மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து சமைத்து 617 உணவு வகைகளை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தவர்.
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் நீண்ட காலம் நடுவராக இருந்தார். அவரது தனித்துவமான பாணி மற்றும் நகைச்சுவை காரணமாக பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பல சமையல் நிகழ்ச்சிகளிலும் புத்தகங்களிலும் பங்களித்தவர். தென்னிந்திய உணவு வகைகளை உலக அளவில் பிரபலப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் வெள்ளாற்றில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 9 பேர்!! உயிரைக் கையில் பிடித்தபடி தவித்த பொருட்காட்சி பணியாளர்கள்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடுப்பு எலும்பு முறிவு மற்றும் முழங்கால் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் குக் வித் கோமாளி சீசன் 7 செமி-ஃபைனல் நிகழ்ச்சியில் பங்கேற்காததால் அவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. அப்போது அவரே வீடியோ வெளியிட்டு தான் நலமுடன் இருப்பதாக தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செஃப் தாமு இன்று காலை காலமானார். அவரது மறைவு செய்தி வெளியானதும் ரசிகர்களும் தொலைக்காட்சி உலகத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது பங்களிப்புகள் தமிழ் சமையல் துறையில் நீண்டகாலம் நினைவுகூரப்படும்.
இதையும் படிங்க: பாஜக உடன் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! மோடி, அமித் ஷாவுடன் இணக்கம்? காங்கிரசில் அதிருப்தி!