2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் வகையில், திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறும்” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வேகம் காட்டி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த முக்கியக் கூட்டத்தில், தொகுதி வாரியான நிலவரங்கள், கூட்டணிக் கட்சிகளுடனான உறவு மற்றும் எதிர்க்கட்சிகளின் வியூகங்களை முறியடிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்த கையோடு நடைபெறும் இந்த ‘மெகா மீட்டிங்’ தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 'திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்' வரும் 20-01-2026 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள 'கலைஞர் அரங்கில்' நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மட்டுமின்றி, திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு? கேட்கிறது அவங்க உரிமை.. ஆனா, எப்போதுமே தனி கட்சி ஆட்சி தான்! அமைச்சர் பெரியசாமி அதிரடி!
இந்தக் கூட்டத்தின் முக்கியப் பொருளாக '2026 சட்டப்பேரவைத் தேர்தல்' என அறிவிக்கப்பட்டுள்ளதே அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. பூத் கமிட்டி அமைப்பது, அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மற்றும் தற்போதைய அரசியல் சூழலில் கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இதில் முக்கிய அறிவுரைகளை வழங்க உள்ளார். குறிப்பாக, கடந்த காலத் தேர்தல்களை விட 2026-ல் ஒரு மிகப் பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி நிர்வாகிகளைத் தயார்படுத்தும் விதமாக இந்தக் கூட்டம் அமையவுள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..!! களத்தில் இறங்கிய திமுக..!! பிப்.8ல் திமுக தேர்தல் முகவர்கள் மாநாடு..!!