தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க வழிவகுத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் அதில் திமுக அரசின் அலட்சியப் போக்கைச் சுட்டிக்காட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (டிசம்பர் 17, 2025) மிகக் கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். இருமொழிக் கொள்கை என்று பேசிக்கொண்டு, திராவிட மாடல் ஆட்சி மாணவர்களின் வாழ்வில் விளையாடுவதாக அவர் சாடியுள்ளார்.
நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவிற்கு, அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டது என்பதை எடப்பாடி பழனிசாமி நினைவு கூர்ந்தார்.
"டிசம்பர் 1, 2025 அன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திமுக அரசு மூத்த வழக்கறிஞர்களை நியமிக்காமல் ஜூனியர் வழக்கறிஞர்களை ஆஜர்ப்படுத்தியது. தனது 2011-ஆம் ஆண்டைய தேர்தல் வழக்கை நடத்துவதற்கு மூத்த வழக்கறிஞர்களைக் குவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தின் உயிர்நாடியான இருமொழிக் கொள்கை தொடர்பான வழக்கில் ஏன் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அவலநிலையில் சேலம் அரசு மருத்துவமனை… என்னதான் செய்றீங்க? கொந்தளித்த அண்ணாமலை…!
தனது அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பாலியல் குற்றவாளிகள், மணல் கடத்தல்காரர்கள் மற்றும் ஊழல் அமைச்சர்களைக் காப்பாற்றக் கோடிக்கணக்கான அரசுப் பணத்தைச் செலவழித்து டெல்லி வழக்கறிஞர்களை நியமிக்கும் திமுக அரசு, கல்வி தொடர்பான முக்கிய வழக்கில் ஏனோ தானோ என்று நடந்து கொண்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்ட இந்தித் திணிப்பான நவோதயா பள்ளிகளை எம்.ஜி.ஆர் அவர்கள் தெள்ளத்தெளிவாகத் தடுத்து நிறுத்தினார். அந்தப் பாதையிலேயே ஜெயலலிதா அவர்களும், எனது தலைமையிலான அரசும் பயணித்தது. ஆனால் இன்று ஸ்டாலினின் 'விளம்பர மாடல்' அரசு தமிழகத்தைத் தலைகுனிய வைத்துள்ளது.
உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இது திமுக அரசின் 'ஃபெயிலியர் மாடல்' ஆட்சிக்குச் சான்று என்று அவர் விமர்சித்தார். "வாய் வீரம் காட்டாமல், இனியாவது மூத்த வழக்கறிஞர்களை நியமித்துத் தமிழகத்தின் வாதங்களை முழுமையாக முன்வைத்து, இருமொழிக் கொள்கையைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்" என்று முதலமைச்சர் ஸ்டாலினை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை: கனிமொழி தலைமையில் 12 பேர் குழு! – தி.மு.க. அறிவிப்பு