2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு தி.மு.க. கூட்டணி விரிவடைந்து வரும் நிலையில், தொகுதி பங்கீடு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தே.மு.தி.க. மற்றும் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் ஆகிய புதிய கட்சிகள் இணைந்ததால், ஏற்கனவே உள்ள சில கூட்டணி கட்சிகளுக்கு கடந்த தேர்தலைவிட குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தி.மு.க. தலைமை முடிவு செய்திருப்பதாவது: ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை குறைத்து ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளை தே.மு.தி.க. மற்றும் ம.நீ.ம.க்கு வழங்க தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரு கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இதையும் படிங்க: 15 நாள்தான் டைம்!! கூட்டணி பேச்சுவார்த்தையை முடிங்க!! மார்ச் -8 எல்லாரும் மேடையேறணும்! ஸ்டாலின் கறார் கண்டிஷன்!

இந்நிலையில், இந்த கட்சிகளிடமிருந்து தலா ஒரு தொகுதியை எடுத்து, தே.மு.தி.க.வுக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையிலும், ம.நீ.ம.க்கு சில தொகுதிகளும் ஒதுக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. கடந்த தேர்தலில் 174 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தோல்வியடைந்த 41 தொகுதிகளில் சிலவற்றை புதிய கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட ஒரு தொகுதி கூடுதலாக ஒதுக்கி 7 தொகுதிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலைப் போலவே 25 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
சில சிறிய கட்சிகள் மேலும் இணைந்தால், அவற்றுக்கு தகுதிக்கேற்ப தொகுதிகள் ஒதுக்குவது அல்லது தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வைப்பது என தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. இந்த தொகுதி பங்கீடு முடிவுகள் கூட்டணி கட்சிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி எவ்வளவு வலுவாக இருக்கும் என்பது இப்போதே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 5 தொகுதி தர்றோம்!! ஆனால் உதயசூரியன்ல தான் நிக்கணும்! கமலஹாசனுக்கு திமுக நெருக்கடி! சிக்கலில் மநீம!