சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தனது ரசிகர் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மகளிர் நிர்வாகிகளுக்குத் தீபாவளிப் பரிசாகக் காமாட்சி வெள்ளி விளக்குகளை அவர் நேரில் வழங்கினார்.
முன்னதாக, நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த நடிகர் தனுஷின் சகோதரிகளான கார்த்திகா தேவி மற்றும் விமலா கீதா ஆகியோர் உணவு அருந்தும் கூடத்திற்குச் சென்று, உணவு உபசரிப்பு குறித்து ரசிகைகளிடம் நலம் விசாரித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து மேடைக்கு வந்த நடிகர் தனுஷ், மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேடையில் அரசியல் கருத்துக்கள் எதையும் பேசாமல் சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டுமே சுருக்கமாகப் பேசிய அவர், உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள். அனைவரும் பத்திரமாகப் பார்த்து வீட்டிற்குச் செல்லுங்கள் என்று கூறி விடைபெற்றார்.
இதையும் படிங்க: தனுஷை சுற்றி அரசியல் கணக்கு? அடிபடும் அர்ஜுன் மூர்த்தி பெயர்.. ரஜினி சொன்னது என்ன?
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விஜய் முதல்வர் ஆவார் என்பது போல தனுஷுக்கும் அரசியல் களத்தில் மாறுபட்ட எதிர்பார்ப்பு இருக்கலாம்; இதுவரை யாரும் செய்யாத புதிய மாற்றங்களை அவர் செய்வார். தமிழகத்திற்கு நல்லது செய்யவே தனுஷ் வருகிறார்; தற்போதைய ஆட்சியை விடச் சிறப்பான ஆட்சியை அவர் கொடுப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது" என்று தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்யுடன் போட்டியா..?? தனுஷின் அரசியல் நகர்வு திருப்புமுனையாகாது..!! ஒரே போடாக போட்ட அமைச்சர்!!