கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி சென்று அங்கே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். ஆனால் செய்தியாளர்களிடன் பேசுகையில், டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்க்க சென்றதாக கூறினார். ஆனால் அவர் இரவு நேரத்தில் 3 கார்கள் மாறி மாறி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது பெரிய பேசுபொருளானது. பின்னர் தான் அமித்ஷா சென்னை வந்தார். அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பி பிரயோஜனமில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு வர வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று டெல்லி சென்று மனுவாக அளித்தேன். இதன்பின் உடனடியாக சுமார் ரூ.3 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. உன்னால் பெற முடிந்ததா? முதலமைச்சர் என்று தப்பட்டம் அடித்து கொள்ளும் மு.க.ஸ்டாலினால் பெற முடிந்ததா? சென்னை மெட்ரோ ரயில் அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதையும் படிங்க: எழுத்தில் சூரப்புலி... செயலில் எலி! அவரு சூனாபானா தவழப்பாடியார்... நக்கலடித்த ஆர்.எஸ்.பாரதி

அதற்கான நிதியையும் மத்திய அரசு விடுவித்தது. அதிமுக மக்களின் பிரச்சனைகளை பட்டியலிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மனுவாக அளித்து, நிதியை விடுவிக்க செய்துள்ளோம். அதனை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி 3 கார்களில் சென்றார் என்று சொல்கிறார்கள்.. நான் நடந்துகூட போவேன்.. உங்களை மாதிரி கோடிக் கோடியாக கொள்ளையடித்தா வைத்திருக்கிறேன்.. டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய பின் தம்பிதுரை காரில் சென்றேன்.

அவர் என்னை இறக்கிவிட்டுவிட்டு சென்றார். பின் அங்கிருந்து வேறு காரில் ஹோட்டலுக்கு சென்றேன். ஒரு நண்பரை பார்ப்பதற்காக.. அதன்பின் நண்பர் ஒருவரின் கார் மூலமாக அமித் ஷாவை சந்திக்க சென்றேன்.. இதில் என்ன கண்டுபிடித்தீர்கள்.. அவர் என்ன பாகிஸ்தானில் உள்ள அமைச்சரா? இந்தியாவின் உள்துறை அமைச்சர் தானே.. திமுகவுக்கு பதிலாக நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வென்றிருந்தால், அங்கேயே குரல் கொடுத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கம்.. பாஜகவுக்கு பெரிய இழப்பு.. பெங்களூரு புகழேந்தி சொல்லும் காரணங்கள்.!!