இந்தியாவில் வங்கிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ரிசர்வ் வங்கியில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், தங்க நகைக்கடனில் முறைகேடு நடப்பதாகவும் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவதில் ஒழுங்கற்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகளுக்கான புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. மேலும் நகைக்கடனில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் நகை வாங்கிய ரசீதைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளில் நகைகளை அடகு வைப்பவர்கள், ஆண்டுதோறும் வட்டியை மட்டுமே செலுத்தி, மறு அடகு வைக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி, அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறையைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அனைத்து தங்க நகைக் கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.2 லட்சம் வரையிலான நகைக்கடனுக்கு விலக்கு.. ஆர்பிஐ-க்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை..!

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மத்திய நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் செயல்படும் நிதி சேவைகள் துறை, தங்கக் கடன் பெறும் நடைமுறைகள் குறித்து ஆர்.பி.ஐ. வெளியிட்ட வரைவுத் தரநெறிகளை முறைப்படுத்த வேண்டி பரிந்துரைகள் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளிலிருந்து ரூ. 2 லட்சத்திற்கு கீழ் கடன் பெறும் சிறு தொகை கடன் பெறுநர்களை விலக்க பரிந்துரை செய்திருக்கிறது.

இருப்பினும் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள், தங்களின் அவசரத் தேவைகள், மருத்துவ மற்றும் கல்வி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், அனைத்து தங்க நகைக் கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வழியாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், மத்திய நிதி சேவைகள் துறை வழங்கியுள்ள இந்த முக்கிய பரிந்துரைகளுக்கு ஆர்.பி.ஐ. பரிசீலிப்பதுடன், தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர அதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: RBI ரூல்ஸ்லாம் இங்கே எடுப்படாது... அமைச்சர் பெரியகருப்பன் அதிரடி!!