நான் யானை அல்ல குதிரை என்று படையப்பா ஸ்டைலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சித்தரித்து கோவையில் அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா’’ என்று கேள்வி எழுப்பியது.

அதனால், அவர் அமைச்சர் பதவியில் தொடர்ந்தால், ஜாமின் ரத்தாகும் சூழ்நிலை உருவானது. இவ்விரு அமைச்சர்களாலும், தமிழக அரசுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. அதை தவிர்க்க, இருவரும் ராஜினாமா செய்ய முதல்வர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதை ஏற்று அவர்கள் இருவரும் முதல்வரிடம் ராஜினாமா கடிதம் வழங்கினர்.
இதையும் படிங்க: மங்குனி ஆட்சி நடத்திய இபிஎஸ் திமுக அமைச்சரவை மாற்றத்தை விமர்சிப்பதா.? ஆர்.எஸ். பாரதி பொளேர்.!

அவர்களின் ராஜினாவை ஏற்ற முதல்வர் ஸ்டாலின், அவற்றை ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். மூன்று அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்தும், அமைச்சரவையில் மீண்டும் மனோ தங்கராஜை சேர்க்க அறிவுறுத்தியும், முதல்வர் அளித்த பரிந்துரையை கவர்னர் ஏற்றார்.
முதல்வர் பரிந்துரையின்படி, செந்தில் பாலாஜி வசமிருந்த மின்சாரத்துறை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடமும், செந்தில் பாலாஜி வசமிருந்த மது விலக்கு ஆயத்தீர்வை துறை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கொங்கு மண்டலத்தில் தங்களது பவரைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் படையப்பா ஸ்டைலில் செந்தில் பாலாஜியின் படத்தையும், "நான் யானை அல்ல... குதிரை டக்குனு எழுவேன்..." என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்பார் என்பதை எதிர்பார்க்கும் வகையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய முடியாது.. வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்..!