சென்னை: திமுக கூட்டணியில் சமீபத்தில் இணைந்த தேமுதிகவுக்கு 10 சட்டசபைத் தொகுதிகளுக்கு குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டால், கட்சியின் மாவட்டச் செயலர்கள் பதவி விலகப் போவதாக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்த எச்சரிக்கை திமுக கூட்டணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்ட நிலையில், சட்டசபைத் தேர்தலில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இதுவரை திமுக தலைமையால் உறுதி செய்யப்படவில்லை. தற்போது 8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என தகவல் பரவி வருவது கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: 2011-ல் அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் மக்கள் நலக் கூட்டணி, அமமுக உள்ளிட்ட கூட்டணிகளுடன் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் களமிறங்கியது. ஆனால் திமுக கூட்டணியில் இணைந்த பிறகு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் சீட் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: தேமுதிகவை இழுத்து வந்தது யார்? திமுகவில் கோஷ்டி பூசல்?! கனிமொழி Vs சபரீசன் தரப்பு வாக்குவாதம்!

இதனால் சில மாவட்டச் செயலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். “குறைந்தபட்சம் 10 தொகுதிகளுக்கு குறைவாக ஒதுக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்வோம்” என்று அவர்கள் திட்டவட்டமாக எச்சரித்துள்ளனர்.
இந்த அதிருப்தியை சமாளிக்கும் வகையில் தேமுதிக தலைமை மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
திமுக தலைமை இப்போது தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் போகிறது என்பதை விரைவில் அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 10 சீட் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், தேமுதிகவுக்குள் பெரும் கலகம் வெடிக்கும் அபாயம் உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தேமுதிக-திமுக உறவில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றம், வரும் சட்டசபைத் தேர்தல் கூட்டணி அரசியலை பெரிதும் பாதிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: விஜயின் வேட்பாளர் தேர்வுக்கு உதவும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்?! தவெக புது ரூட்! தகுதியானவரை செலக்ட் செய்ய ஏற்பாடு!!