அடுத்த ஆண்டு 2027-ன் முதல் பாதியில் இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசியான ‘கியூடெங்கா (Qdenga)’ தனியார் சந்தையில் கிடைக்கத் தொடங்கும். ஜப்பானின் டேகேடா பார்மாசூட்டிக்கல் நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்கள் தனியார் சந்தையில் விநியோகிக்கும்.
மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஜூலை 2026-ல் இதற்கு அனுமதி அளித்தது. இது 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்றது. முன்பு டெங்கு பாதிக்கப்பட்டதா என்று ரத்தப் பரிசோதனை தேவையில்லை. டெங்கு நோய் ஏடீஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. இவை பகலில் கடித்து, தேங்கிய தண்ணீரில் முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.
பருவமழை காலத்திலும் அதற்குப் பின்னரும் அதிகமாகப் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி, தீவிரமானால் ரத்தக்கசிவு மற்றும் உயிரிழப்பு ஏற்படலாம். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனே டெங்கு பரிசோதனை செய்து, ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். தட்டுக்கள் ஒரு லட்சத்திற்குக் கீழ் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: மக்களே உஷார்..!! - தமிழ்நாட்டில் கிடுகிடுவென அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு... ஒரே நாளில் இவ்வளவு பேருக்கா?
தற்போது டெங்குவுக்குத் தனியான மருந்து இல்லை. காய்ச்சல் மருந்துகள், ஆண்டிபயாடிக் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளே கொடுக்கப்படுகின்றன. கியூடெங்கா டெங்கு வைரஸின் நான்கு வகைகளுக்கும் (DENV-1, 2, 3, 4) எதிராக செயல்படுகிறது. இது பலவீனப்படுத்தப்பட்ட DENV-2 வைரஸை அடிப்படையாகக் கொண்டு, மற்ற மூன்று வகைகளின் புரதங்களையும் இணைத்துத் தயாரிக்கப்பட்டது. DENV-2 தான் ரத்தத் தட்டுக்களைக் குறைத்து ரத்தக்கசிவை ஏற்படுத்தும் ஆபத்தான வகை.

தடுப்பூசி உடலில் செலுத்தப்பட்டதும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி நான்கு வகைகளையும் எதிர்க்க உதவுகிறது. இரண்டு டோஸ்களாக (தலா 0.5 மில்லிலிட்டர்) மூன்று மாத இடைவெளியில் செலுத்தப்படும். மருத்துவமனை அனுமதியை சுமார் 80-90 சதவீதமும், பாதிப்பை சுமார் 60 சதவீதமும் குறைக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கீகாரம் பெற்ற இது 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
டேகேடா நிறுவனம் 2030-க்குள் ஆண்டுக்கு 10 கோடி டோஸ்கள் தயாரிக்க இலக்கு வைத்துள்ளது. இந்தியாவில் பயோலாஜிக்கல் ஈ நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. விலை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. ஐரோப்பிய நாடுகளில் ஒரு டோஸ் ரூ.10,000-11,000 வரையும், இந்தோனேசியாவில் ரூ.3,000-6,000 வரையும் உள்ளது.
இந்தியாவில் ரூ.1,500 முதல் 3,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தடுப்பூசி வைரஸை எதிர்க்க உதவினாலும், கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்காது. வீட்டைச் சுற்றி தேங்கிய தண்ணீர், பூத்தொட்டிகள், டயர்கள், காலி பாட்டில்கள் போன்றவற்றை அகற்றினால் மட்டுமே பரவலைக் கட்டுப்படுத்த முடியும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் லட்சக்கணக்கானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தடுப்பூசி கிடைத்தால் பாதிப்பும் உயிரிழப்பும் குறையும் என மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால் பொது சுகாதார நடவடிக்கைகளும் மக்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாதவை.
இதையும் படிங்க: டெங்கு பிடியில் தமிழகம்? கிடுகிடுவென உயரும் எண்ணிக்கை..!! ஒரே நாளில் 244 பேருக்கு தொற்று!!