கர்நாடக மாநில அரசியலில் எப்போதும் பரபரப்புக்குக் பஞ்சம் இருக்காது என்பதை நிரூபிக்கும் வகையில், அங்கு மீண்டும் 'ரெசார்ட் அரசியல்' அரங்கேறத் தொடங்கியுள்ளது.
மாநிலத்தில் காலியாக உள்ள 7 சட்ட மேலவை (MLC) உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாப்பதற்காகப் பெங்களூரு அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் 150-க்கும் மேற்பட்ட அறைகளை ஒட்டுமொத்தமாக முன்பதிவு செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தச் சட்ட மேலவை தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு தலா 28 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு ஓட்டுகள் தேவைப்படுகிறது.
இதையும் படிங்க: கேட்ட இலாகா கிடைக்கல! அமைச்சர் பதவியே வேணாம்! ராமலிங்க ரெட்டி ராஜினாமா! கர்நாடகாவில் பரபரப்பு!
தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கைப் பலத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆளும் காங்கிரஸ் கட்சி 4 இடங்களையும், எதிர்க்கட்சியான பா.ஜ.க. 2 இடங்களையும் எவ்வித சிரமமும் இன்றி எளிதாகக் கைப்பற்ற முடியும்.

இருப்பினும், காங்கிரஸ் கட்சி கூடுதலாக ஐந்தாவது வேட்பாளர் ஒருவரைப் போட்டிக்குக் களமிறக்கியுள்ளது. அதே நேரத்தில், வெறும் 19 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கைவசம் வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் (ம.ஜ.த) கட்சியும் ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. தங்களது கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.விடம் உள்ள உபரி ஓட்டுகள் தங்களுக்குக் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் ம.ஜ.த இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது.
இந்த மேலவை தேர்தலில் ரகசிய வாக்குப்பதிவு முறை பின்பற்றப்படுவதால், தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாராவதுcross-voting எனப்படும் கட்சி மாறி வாக்களித்து விடுவார்களோ என்ற அச்சம் காங்கிரஸ், பா.ஜ.க., ம.ஜ.த ஆகிய மூன்று கட்சிகளுக்குமே உள்மனதில் நிலவி வருகிறது. குறிப்பாக, காங்கிரஸைச் சேர்ந்த 14 முக்கிய எம்.எல்.ஏ.க்களை ம.ஜ.த தலைவர்கள் ரகசியமாகத் தொடர்பு கொண்டு பேசி வருவதாகக் காங்கிரஸ் மேலிடத்திற்கு உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து எச்சரிக்கையடைந்த காங்கிரஸ் மாநிலத் தலைமை, தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பிடதியில் உள்ள பிரபல 'ஒண்டர்லா' சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்களுக்காக 150 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு, பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் அவர்கள் கொண்டு வரப்பட உள்ளனர்.
இந்த விடுதியிலேயே இன்று மாலை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது. இந்த அதிரடி நடவடிக்கைகள் கர்நாடக தேர்தல் களத்தை மேலும் சூடேற்றியுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சர் என்னவோ சிவக்குமார் தான்!! ஆனா அமைச்சரவை கண்ட்ரோல் சித்தராமையா கையில்!