கரூரில் அரசு பணி வழங்கியதை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பாக தமிழக முதலமைச்சர் விஜய் கரூரில் பணியாணைகளை வழங்கியிருந்த நிலையில், கரூர் விவகாரம் தொடர்பாக பணியாணை வழங்கியதை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற காவேரிக்கா மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு கருணையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலை வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த மதுரைக் கிளை, அரசு வேலை வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் சிலரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்கள்.
இந்த வழக்கு இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வேலையை ரத்து செய்த மதுரைக் கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
மேலும், எதிர்மனுதாரர்களான சீனி அகமது உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த வழக்கின்போதான வாதத்தைப் பொறுத்தவரைக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவது என்பது அரசு எடுத்த கொள்கை முடிவு. இந்தக் கொள்கை முடிவில் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும் என நீதிபதிகள் தமிழ்நாடு அரசு சார்பில் கேள்வி எழுப்பினர்.
அதேபோல, நீதிமன்றம் எதிர்மனுதாரர்களைப் பார்த்தும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. அதாவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்கக் கூடாது என நீங்கள் எப்படி கூற முடியும் என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.
அதாவது, மதுரைக் கிளையில் பிரதான மனுதாரர்களாகவும், உச்சநீதிமன்றத்தில் எதிர்மனுதாரர்களாகவும் இருக்கக்கூடியவர்களைப் பார்த்து, வேலை வழங்கக் கூடாது என்று கூறுவதற்கு நீங்கள் யார் என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மதுரைக் கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கக்கூடிய மனுக்கள் குறித்தும் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருக்கிறார்கள்.