விருதுநகரில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, செய்தியாளர்களிடம் முதல்வர் விஜயைப் பற்றி பேசும்போது, அவர் வாழும் எம்ஜிஆராகத் திகழ்கிறார் என உறுதியாகக் கூறினார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் அவரது செயல்பாடுகளை சுட்டிக்காட்டிய அவர், “வாழும் எம்ஜிஆராக இருக்க ஒரு தனித்துவமான மனப்பான்மை தேவை. எல்லாரும் அந்த நிலைக்கு வந்துவிட முடியாது” என்றார்.
இந்தக் கருத்து, நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வருவதற்கான ரசிகர் அழைப்புகளும், ரசிகர் மன்றக் கொடி வெளியீடும், தனுஷ் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகப் பரவும் வதந்திகளும் பின்னணியில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலாக அமைந்தது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியில் இளைய அமைச்சராகவும், தொழில்துறைப் பொறுப்பை ஏற்றுள்ள ஒரே பெண் அமைச்சராகவும் திகழும் கீர்த்தனா, மேயர் பிரியா தொடர்பான சர்ச்சையையும் தொட்டார். சென்னை மேயர் ஆர். பிரியா, தவெக அரசு மாநகராட்சிப் பணிகளை ரத்து செய்தது, நிதி ஒதுக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகிறார்.
இதையும் படிங்க: அம்பத்தூர் Capitaland திறப்பு விழாவில் விஜய் உருட்டிய அன்னாசி பழம்!! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய கதை என்ன?
அதேநேரம், தவெக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி தன்னைத் தவறாகச் சித்தரிக்கும் வீடியோக்களை வெளியிடுவதாகவும், தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் புகார் அளித்துள்ளார். காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனக் குறைபட்ட பிரியா, முதல்வர் மௌனம் காப்பதாகச் சாடியிருந்தார்.

இதற்கு பதிலளித்த கீர்த்தனா, மேயர் பிரியாவை மட்டும் அல்ல, தன்னையும் திமுக விர்ச்சுவல் வாரியர்ஸ் கீழ்த்தரமாக சித்தரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். “அவதூறுகளை திரித்துப் பயன்படுத்திக் கொள்கிறார் பிரியா. முதல்வர் விஜய் இதில் நடவடிக்கை எடுப்பார்” எனத் தெரிவித்தார். சமீபத்தில் திமுக மேடையில் முதல்வர் விஜயை தரக்குறைவாகப் பேசிய நிகழ்வில் பிரியா சிரித்ததாகவும் விவாதம் எழுந்திருந்தது.
தமிழக அரசியலில் நடிகர்கள் நுழைவு பற்றிய விவாதம் தொடரும் நிலையில், கீர்த்தனாவின் இந்தக் கருத்து, விஜயின் தலைமைக்குத் தனித்துவமான இடத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. எம்ஜிஆர் பாணியிலான மக்கள் தொடர்பு மற்றும் திட்டங்களைச் சுட்டிக்காட்டி அவர் பேசியது, எதிர்க்கட்சி விமர்சனங்களுக்கும், புதிய நட்சத்திரங்களின் அரசியல் ஆர்வத்திற்கும் எதிரான பதிலாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் பட்டு வேட்டி, சட்டை அணியக் காரணம் இதுதானாம்..!! செங்கோட்டையன் சொன்ன சுவாரசிய தகவல்!!