தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்து நிகழும் வன்முறைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கவலை தெரிவித்துள்ளார். மாவட்டம் வன்முறைக்களமாக மாறி வருகிறதா, மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை அரசு வேடிக்கை பார்க்கிறதா என்ற கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதையும், தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதையும், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் அருகே காவலாளி ஒருவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டிய அவர், ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன என்றார். திருவிழாக்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் பகுதிகள் போன்ற இயல்பான இடங்களில்கூட வன்முறை நிகழும் சூழல் உருவாகியிருப்பது மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புவதாக அவர் தெரிவித்தார்.

கொலை நடந்த பிறகு குற்றவாளிகளைத் தேடி கைது செய்வது மட்டும் காவல்துறையின் செயல்பாடாக இருக்க முடியாது என்று வலியுறுத்திய வேல்முருகன், குற்றங்கள் நிகழ்வதற்கு முன்பே அவற்றைத் தடுப்பதும், பதற்றமான பகுதிகளைக் கண்காணிப்பதும், பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதுமே அரசின் முதன்மையான கடமை என்றார்.
இதையும் படிங்க: காமராஜர் ஆட்சியே இலக்கு..! சட்டம் ஒழுங்கு சிறப்பா இருக்கு..! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி..!
தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெறும் இத்தகைய சம்பவங்களை அரசு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பிய அவர், மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கும் குற்றங்களைத் தடுப்பதற்கும் காவல்துறையின் செயல்பாட்டைத் தீவிரப்படுத்துவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்றும் வினவினார்.மக்களின் உயிரைப் பாதுகாப்பது ஆட்சியின் அடிப்படைக் கடமை என்பதை தமிழக அரசு இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தவெக கூட்டணியில் இருந்தே விஜய் அரசை விமர்சிக்கும் ஜோதிமணி! தமிழக காங்கிரஸில் அதிருப்தி?!