சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் குறிவைத்து, அசாம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் டிரைடென்ட்’ நடவடிக்கையில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.100 கோடி மதிப்பிலான ஹவாலா பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமித்ஷா தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மூன்று மாநிலங்களிலும் மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் மாநில போலீசார் இணைந்து மொத்தம் 38 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
சர்வதேச அளவில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பைச் சிதைப்பதும், அதன் நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்டறிவதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.
இதையும் படிங்க: பாஜக உடன் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! மோடி, அமித் ஷாவுடன் இணக்கம்? காங்கிரசில் அதிருப்தி!
இந்தச் சோதனைகளின்போது ரூ.100 கோடி மதிப்பிலான ஹவாலா பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், 1,424 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ரூ.17.82 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 500 டெட்டனேட்டர்கள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கடத்தல் வலையமைப்பு இந்தியா, மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களைக் கடத்தியதாக அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாதையை அவர் ‘மரண முக்கோணப் பாதை’ என்று விவரித்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரிடமும், கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் போதைப்பொருள் வலையமைப்புகளை ஒழிப்பதற்கு 2029ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக அமித்ஷா கூறியுள்ளார். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் வலையமைப்பு முற்றிலும் முறியடிக்கப்படும் வரை நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய விசாரணை அமைப்புகள், அசாம், மிசோரம், மணிப்பூர் மாநில போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆபத்தில் இருக்கிறார் வீ த லீடர்ஸ் அண்ணாமலை! அமித் ஷா காதுகளுக்கு எட்டிய சீக்ரெட் மேட்டர்! தலைவர்கள் வருத்தம்!