நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி, இயற்கை அழகால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் இந்த அருவி, மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்குடன் சீறிப் பாயும் காட்சியை அளிக்கிறது. தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை, அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு வனத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது. இந்தத் தடை ஆறாவது நாளாகத் தொடர்கிறது. அருவிக்கு அருகே சென்று குளிக்கவோ, தண்ணீரில் இறங்கவோ அனுமதி இல்லை.

இருப்பினும், அருவியின் இயற்கை அழகை தொலைவில் இருந்து பார்வையிட மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். நீர்வரத்து சீராகும் வரை இந்தத் தடை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மணிமுத்தாறு அருவி களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்திருப்பதால், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதையும் படிங்க: ருத்ரதாண்டவம் ஆடப்போகும் ‘அர்னாப்’... இன்று தமிழகத்திற்கும், நாளை ஆந்திராவுக்கும் வெளியானது அதி முக்கிய எச்சரிக்கை...!
மழைக்காலங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம். கடந்த காலங்களில் இதுபோன்ற சூழல்களில் அசம்பாவிதங்கள் நடந்திருப்பதால், பாதுகாப்பை முன்னிட்டு தடை விதிப்பது வழக்கமாகிவிட்டது. அருவியைப் பார்க்க வரும் பயணிகள் பாதுகாப்பு வேலிக்கு வெளியே இருந்து காட்சியை ரசிக்கலாம். ஆனால் தண்ணீருக்குள் இறங்குவது ஆபத்தானது என்பதால் கண்டிப்பாகத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING விட்டாச்சு லீவு... தேனி, கள்ளக்குறிச்சியில் எந்தெந்த வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை?