திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அதிக கவனம் எடுத்துக்கொண்டுள்ளது. குறிப்பாக வர உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை தட்டித்தூக்க பாஜக திருப்பரங்குன்றம் விவகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி ஏஜெண்ட்களை தயார்படுத்துவது, சுற்றுப்பயணம், தேர்தல் பணிகள் என அனைத்து கட்சிகளும் வேகமாக பணியாற்றி வருகின்றன.
குறிப்பாக அயோத்தி விவகாரத்தை கையில் எடுத்து மத்தியில் ஆட்சியைப் பிடித்ததைப் போல், திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதும் சந்தேகத்தை கிளப்பியது.
இதையும் படிங்க: “எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” - அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விட்ட அப்பாவு...!
மேலும் காலங்கலமாக மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவிற்கு அருகேயுள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன. சட்டமன்ற தேர்தலை வைத்து இந்துக்கள் மத்தியில் திமுக மீதான வெறுப்புணர்வை அதிகரிக்க பாஜக இப்படியொரு திட்டத்தை வகுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாரத பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி தமிழகம் வரும் பாஜக முக்கிய தலைவர்கள் அனைவரையும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வைக்க வேண்டும் என்ற திட்டத்தை டெல்லி தலைமையிடம் தமிழக பாஜக எடுத்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் பாஜக பக்கம் திருப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதமாகியுள்ளது. திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்றுவதற்கு பாஜக முயற்சி செய்வதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் பாஜகவின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்களை திருப்பரங்குன்றத்திற்கு வரவழிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டில் குஸ்கா தான்" - கோவையில் போஸ்டர் ஒட்டி திமுகவினர் கொக்கரிப்பு...!