சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவரது மகனும் முன்னாள் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக நீடிக்கும் மோதல் முடிவுக்கு வராத நிலையில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இரு தரப்பும் வெவ்வேறு கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. மேலும், பல தொகுதிகளில் இரு தரப்பு வேட்பாளர்களும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது.
அன்புமணியின் அக்கா ஸ்ரீ காந்தி பென்னாகரம் அல்லது தர்மபுரி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இந்த தொகுதிகளில் ஒன்றில் அன்புமணி அல்லது அவரது மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுவார்கள் என்று பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ராமதாஸ் குடும்ப உறுப்பினர்களே தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பென்னாகரத்தில் ஸ்ரீ காந்தி அல்லது அவரது மகன் சுகந்தன் போட்டியிட்டால், தற்போதைய எம்எல்ஏவும் ராமதாஸ் தரப்பு ஆதரவாளருமான ஜி.கே. மணி மேட்டூர் தொகுதிக்கு மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. அப்பாவிடம் இருந்து தன்னை பிரித்தது ஜி.கே. மணிதான் என்று குற்றம்சாட்டி வரும் அன்புமணி, அவரை தோற்கடிக்க குடும்ப உறுப்பினரையே வேட்பாளராக நிறுத்துவார் என்று கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தவெக + காங்., கூட்டணி! வாழ்த்தி வரவேற்போம்!! செங்கோட்டையன் சூசக பதில்!
ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் இடையே சமூக வலைதளங்களில் நடந்து வரும் வார்த்தைப் போர், தேர்தல் களத்திலும் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது வன்னியர் சமுதாயத்துக்குள் பெரும் பிளவை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

பாமக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ராமதாஸின் அழைப்பை ஏற்று வன்னியர் சமுதாயம் அவரை ஆதரித்தது. அதன் காரணமாகவே அன்புமணியையும் ஏற்றது. கட்சியை காப்பாற்றுவதில் இருவருக்கும் அக்கறை இருக்க வேண்டும். ஆனால், ஒருவரையொருவர் வீழ்த்துவதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
குடும்ப சண்டை கட்சி சண்டையாகி, தேர்தல் களத்தில் வன்னியர் சமுதாய மோதலாக வெடிக்கும் அபாயம் உள்ளது. ராமதாஸ் குடும்ப உறுப்பினர்கள் ஒரு தொகுதியில் நேருக்கு நேர் மோதினால், சமுதாயத்துக்குள் பெரும் பிளவு ஏற்படும். பாமகவை நம்பி உழைத்த எங்களைப் போன்ற நிர்வாகிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. சமுதாய நலன் கருதி இருவரும் சமரசம் செய்துகொள்ள வேண்டும்” என்றார்.
பாமகவின் இந்த உள்மோதல் கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இரு தரப்பும் வெவ்வேறு கூட்டணியில் போட்டியிடுவது உறுதியான நிலையில், வன்னியர் பெரும்பான்மையுள்ள தொகுதிகளில் கடும் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எந்த கட்சியிலயும் இப்படி நடக்காது!! தமிழ்க காங்கிரஸ் அழிவின் பாதையில் போகிறது! ஜோதிமணி உருக்கம்!