பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே அண்மைக் காலத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு அவரை செயல் தலைவராக நியமித்தத்தோடு மட்டுமல்லாமல் இனிமேல் நான் தான் பாமகவுக்கு தலைவராக இருப்பேன் என்றும் ராமதாஸ் அறிவித்தார்.
பொதுக்குழு மூலம் உரிய விதிகளின்படி தேர்வு செய்யப்பட்ட என்னை யாரும் தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும் அன்புமணி தெரிவித்தார். இந்நிலையில், பாமகவில் இரு அணிகளாக பிரிந்து தற்பொழுது செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி தலைமையிலான இன்று மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்குழு மூலமாக பாமகவில் யாருக்கு அதிகாரம் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உட்கட்சி தேர்தல் நீடிக்கும் வரை பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடருவார் என்றும், அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிப்பதாகவும் பொதுக்குழுவில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்... என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு...!
அதேபோல் பாமக பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன் மேலும் ஓராண்டு நீடிப்பார் என்றும், பாமக பொருளாளராக திலகபாமா மேலும் ஓராண்டு நீடிப்பார் என்றும் பொதுக்குழு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமகவைப் பொறுத்தவரை நிறுவனரை விட தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. பாமகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் பாமகவில் தற்போது உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, அதுவரை பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை பாமக அன்புமணி தலைமையில் தான் எதிர்கொள்ளும் என்பதையும், ராமதாஸ் நிறுவனர் மட்டுமே தலைவர் கிடையாது என்பதையும் இந்த பொதுக்குழு தீர்மானம் உறுதி செய்துள்ளது.
அதுமட்டுமின்றி பாமகவின் நிறுவனரான நான் தான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன் என ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், பாமகவின் தலைவராக அன்புமணியே கூட்டணியை தேர்வு செய்வார் என்பதும் இந்த பொதுக்குழு தீர்மானம் மூலமாக தெளிவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நேரில் ஆஜரான அன்புமணி... காணொலியில் ராமதாஸ் - நீதிபதி முன்பு நடந்தது என்ன?