வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்தியா-வங்கதேச உறவில் பதற்றம் நீடித்து வருகிறது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வங்கதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 15ஆம் தேதி டாக்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நேஷனல் சிட்டிசன் பார்ட்டி தலைவர் ஹஸ்னத் அப்துல்லா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர், "இந்தியாவில் பிரிவினைவாத சக்திகளுக்கு தங்குமிடம் அளிக்கப்பட்டால், வங்கதேசமும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை (ஏழு சகோதரிகள்) துண்டிக்க உதவும்" என்று கூறினார்.
அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரிக்க உதவுவோம் என்றும் அவர் எச்சரித்தார். இந்தப் பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பினர்.
இதையும் படிங்க: இந்தியாவை துண்டாக்குவோம்?! கொக்கரித்த வங்கதேச தலைவர்! தலையில் குட்டு வைத்த மத்திய அரசு!
இந்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விளக்கம் கேட்டு வங்கதேச தூதர் முகமது ரியாஸ் ஹமிதுல்லாவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அழைத்தது. இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தது.
வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து தீவிரவாத சக்திகள் தவறான தகவல்களை பரப்புவதை இந்தியா முழுமையாக நிராகரிப்பதாக வெளியுறவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டது. இடைக்கால அரசு முழு விசாரணை நடத்தவில்லை, ஆதாரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்பது துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

வங்கதேச மக்களுடன் இந்தியாவுக்கு நெருங்கிய நட்புறவு உள்ளது என்றும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக இந்தியா உள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. தூதரக ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கக் கோரி டாக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நோக்கி டிசம்பர் 17ஆம் தேதி பலர் பேரணியாகச் சென்றனர். இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். வங்கதேச போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். தூதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இறுதியில் போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தொடரும் நிலையில், இந்தியா தூதரக பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊசலாடும் ஷேக் ஹசினா உயிர்! நம்பி வந்தவரை நாடு கடத்துமா இந்தியா? வங்கதேச கோரிக்கையை மறுக்குமா?