தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு தொகுதியின் பல்வேறு இடங்களிலும், அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் போதெல்லாம் தொடர் எதிர்ப்பு நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் கிராம மக்கள் அவரது பிரச்சாரத்தைத் தடுத்து, அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, அங்கிருந்து திருப்பி அனுப்பும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அடுத்தடுத்து சில பிரச்சார களங்களுக்குச் செல்லாமல் அவர் தவிர்த்து வருவதையும் காண முடிகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக அமைச்சர்களுடன் அவர் பிரச்சாரத்திற்கு சென்றபோதும், கிராம மக்கள் அவர்களை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில்தான், இன்று காலை திட்டமிட்டபடி மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தையும் அவர் ரத்து செய்துள்ளார். இன்று காலை 7 மணி முதல் மூலனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வஞ்சிப்பாளையம், மேட்டுவலசு, சோமன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அந்தப் பகுதியில் உள்ள நிர்வாகிகளும் அவர் பிரச்சாரத்திற்கு வருவார் எனக் காத்திருந்தனர்.
இதையும் படிங்க: தவெக, திமுக, அதிமுக மூலதன கொள்ளைக்கு எதிரா பேசாது! தாராபுரத்தில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேச பேட்டி!
ஆனால், இன்று திடீரென அந்தப் பகுதியில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தை அவர் ரத்து செய்துள்ளார். இந்த தொகுதியைப் பொறுத்தவரை, பல்வேறு ஊர்களில் இருந்து உளவுப்பிரிவு போலீசார் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதிகளில் வேட்பாளருக்கு ஏதேனும் எதிர்ப்புகள் இருந்தால், அது குறித்து முன்கூட்டியே தகவல் அளிக்கப்படுகிறது.
அதற்கேற்ப அவர் தனது பிரச்சார களத்தை மாற்றி அமைப்பது, கூடுதல் போலீசாரை அங்கு நியமிப்பது அல்லது பாதுகாப்புக்காக கூடுதல் ஆட்களை அழைத்துச் செல்வது என தனது பிரச்சாரத்தை மாற்றி அமைத்து வருகிறார். அதன்படியே சில இடங்களில் அவர் பிரச்சாரத்திற்கு செல்வதையும், கிராமப் பகுதிகளைத் தவிர்த்து வருவதையும் காண முடிகிறது.
அந்த வகையில், இன்று மூலனூர் பேரூராட்சியில் காலை மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தையும் அவர் திடீரென ரத்து செய்துள்ளார். இது குறித்து அவரது தரப்பில் இருந்து முறையான எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், இன்று மாலை திட்டமிட்டபடி பிரச்சாரம் நடைபெறும் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு? நான் பிரசாரத்துக்கு வந்தால் எல்லாம் சரியாகிடும்! முதல்வர் விஜய் நம்பிக்கை!