மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துக்குள் நிலவும்தாக கூறப்படும் அதிருப்தி குறித்து முதல்வரும் அக்கட்சித் தலைவருமான விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “நான் பிரசாரத்துக்கு சென்றால் எல்லாம் சரியாகிவிடும்” என அவர் நிர்வாகிகளிடம் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் முன்பு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். தற்போது இருவரும் தாங்கள் ராஜினாமா செய்த அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இந்த வேட்பாளர் தேர்வு தொடர்பாக தொகுதிகளில் மக்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதாக தவெக நிர்வாகிகள் சிலர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சிக்குள் உள்ள சில நிர்வாகிகளிடமும் அதிருப்தி இருப்பதாகவும், இந்த விவகாரம் கட்சியின் மேலிட கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டே விஜய், தனது நேரடி பிரசாரம் மூலம் நிலைமையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜனநாயகன் படம் லீக் வழக்கில் திடீர் திருப்பம்! கைதான படத்தொகுப்பாளருக்கு நிம்மதி கொடுத்த நீதிமன்றம்!

இந்நிலையில், இரு தொகுதிகளிலும் விஜய் நேரடியாக பிரசாரம் செய்ய உள்ளார். மதுராந்தகத்தில் செப்டம்பர் 25-ம் தேதி பிரசார நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரத்தில் செப்டம்பர் 30-ம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு தொகுதிகளிலும் தலா இரண்டு நாட்கள் என மொத்தம் நான்கு நாட்கள் விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் திட்டம் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ரோடு ஷோ நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 6-ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களின் வெற்றிக்காக விஜய்யின் நேரடி பிரசாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, தாராபுரத்தில் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் பிரசாரத்திற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இடைத்தேர்தல் களம் வரும் நாட்களில் மேலும் பரபரப்பாகும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: தவெக பிரசாரத்தில் பணப்பட்டுவாடா? “தூய சக்தி”க்கு சிக்கல்? மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு பின்னடைவு!