காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. செல்வப்பெருந்தகை பேச்சை யார் டேப் செய்கிறார்கள்? அதை யார் வாங்குகிறார்கள்? யார் விற்கிறார்கள்? என்ற கேள்விகள் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனியார் டிவி சேனலுக்கு பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை, “நான் பேசுவதை டேப் செய்து வருகின்றனர். இது ஒரு கலாசாரமாக மாறிவிட்டது” என்று கூறினார். அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர் யாரை குறிப்பிட்டார் என்று கட்சியில் விவாதம் எழுந்தது.
காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கட்சிக் கூட்டங்கள், விழாக்கள், நிகழ்ச்சிகளில் செல்வப்பெருந்தகை தனிப்பட்ட முறையில் பேசுவதை சில நிர்வாகிகள் மொபைலில் பதிவு செய்து வெளியிடுகின்றனர்.
இதையும் படிங்க: உண்மையான களநிலவரம் என்ன? சொதப்பும் உளவுத்துறை!! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுகடுப்பு!
ஏற்கனவே முன்னாள் தலைவர் அழகிரியின் ஆதரவாளர் ஒருவரை சென்னை போலீசார் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத்தனர். அவரை விடுவிக்க ஆளுங்கட்சி மேலிடத்தில் செல்வப்பெருந்தகை பரிந்துரைக்க வேண்டும் என்று ஒரு நிர்வாகி தொலைபேசியில் கேட்டார். அந்த உரையாடல் டேப் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியானது.
இப்போது செல்வப்பெருந்தகை பேச்சை டேப் செய்பவர் யார்? வாங்குபவர் யார்? விற்பவர் யார்? என்ற சர்ச்சை பெரிதாகியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் தவெக தலைவர் விஜயை ரகசியமாக சந்தித்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர்தான் இதற்கு பின்னால் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

அந்த நிர்வாகிதான் ஏற்கனவே ஒரு அமைச்சர் பேசியதை டேப் செய்து வெளியிட்டார். அமைச்சர் கூறியது: “திமுக ஆட்சி தலைமையும், தலைமையின் மருமகனும் ஆண்டுக்கு 30,000 கோடியை ஊழலில் சம்பாதித்து, என்ன செய்வது என்று தெரியாமல் வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றனர்.” இந்த ஆடியோ வைரலானது.
செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் இப்போது அந்த நிர்வாகியை சந்தேகிக்கின்றனர். அவருடன் தொடர்பில் இருப்பவர்களை தன்னுடன் வர வேண்டாம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அதேபோல் தவெக கூட்டணியை ஆதரிக்கும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலருக்கு சத்தியமூர்த்தி பவனில் கட்சி நிர்வாகப் பணிகளை கவனிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் உள் பிளவு தீவிரமடைந்துள்ளது. டேப் சர்ச்சை கட்சியின் ஒற்றுமையை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்வப்பெருந்தகை இதை எப்படி கையாளப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஆணவப் படுகொலை? இளம்பெண் மர்ம மரணம்... பெற்றோர் மீது காதலன் குற்றச்சாட்டு...!