தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றும் ஒரு காவியமாக மாறி வரும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தின் திருப்புத்தூர் தொகுதியில் இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே மிக அபூர்வமான, நரம்புகளைத் தறிக்கும் ஒரு வெற்றிப் பதிவு நிகழ்ந்துள்ளது. இத்தொகுதியில் போட்டியிட்ட கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பனை, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தித் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே அமைச்சர் பெரியகருப்பனுக்கும், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவி வந்தது. வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றில், ஒவ்வொரு வாக்கையும் எண்ணும் போது இரு தரப்பு முகவர்களும் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டனர்.
இறுதியாகக் கணக்கிடப்பட்டபோது, அமைச்சர் பெரியகருப்பனை விடக் கூடுதலாக ஒரே ஒரு வாக்கை மட்டும் பெற்று சீனிவாச சேதுபதி வெற்றியைத் தட்டிச் சென்றுள்ளார்.இவ்வளவு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முடிவு இருந்ததால், அங்குப் பெரும் பரபரப்பு நிலவியது. இருப்பினும் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: சென்னை வருகிறார் தமிழக பொறுப்பு கவர்னர்.. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!
ஏற்கனவே கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததும், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு போன்ற தொகுதிகளில் அமைச்சர்கள் வீழ்ந்ததும் திமுக-விற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. இப்போது திருப்புத்தூரிலும் ஒரு மூத்த அமைச்சர் தோல்வியடைந்திருப்பது அக்கட்சிக்கு மேலும் ஒரு பலத்த அடியாகும். 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள விஜய், இன்று தனது எம்எல்ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
இதற்கிடையே, விஜயை எதிர்கொள்ள உதயநிதி ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவராக முன்னிறுத்த திமுக தலைமை திட்டமிட்டு வரும் சூழலில், அமைச்சர்களின் தொடர் தோல்வி அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழகப் பொறுப்பு கவர்னர் சென்னை வரவுள்ள நிலையில், ஆட்சி அமைக்கும் அடுத்தகட்ட நகர்வுகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: ஆட்சி அமைப்பதில் இழுபறி: தவெகவிடம் துணை முதல்வர் பதவி கேட்கிறதா பாமக?