இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க பொதுமக்கள் மறுப்பு. இதனால் அங்கு உள்நாட்டு கலகம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பகல்ஹாம் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், இந்தியாவுடனான போர் பதற்றம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அப்போது இந்த விவகாரத்தில் ராணுவத்தின் செயல்பாட்டுக்கு ஆதரவு அளிக்க அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனிருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு மதப் பிரசங்கத்தில் மதகுரு மவுலானா அப்துல் அஜீஸ் காசி பேசியுள்ளார். அதில், “இந்தியாவுடன் போர் தொடுக்க வேண்டுமா என்பதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை உயர்த்துங்கள்” என கேட்கிறார். ஆனால், ஒருவர் கூட கையை உயர்த்தவில்லை.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம், ஆட்சியாளர்களுக்கு மவுலானா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், “இந்தியாவைவிட பாகிஸ்தான் அடக்குமுறையைக் கையாள்கிறது. குறைந்தபட்சம் இந்தியா ஒருபோதும் லால் மசூதி அல்லது வஜிரிஸ்தான் மீது குண்டு வீசவில்லை” என்றார். அதாவது, 2007-ம் ஆண்டு லால் மசூதியை முற்றுகையிட்டது, வஜிரிஸ்தான் மீது பல முறை நடந்த விமானத் தாக்குதல் உள்ளிட்ட பாகிஸ்தான் ராணுவத்தின் உள்நாட்டு அடக்குமுறையை அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.

தற்போதைய ஆட்சியில், பலூச், பஷ்துன் பிரிவு மக்கள், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் (பிடிஐ), மத குருமார்கள், பத்திரிகையாளர்கள் காணாமல் போன விவகாரத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். “பஷ்துன் பிரிவு மக்கள் மீது ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டுள்ளது. இந்நிலையில், இந்தியா பாகிஸ்தானை தாக்கினால் பஷ்துன்களாகிய நாங்கள் இந்திய ராணுவத்தின் பக்கம் நிற்போம்” என்றும் மவுலானா கூறியுள்ளார்.
.
இக்கருத்துகள் பாகிஸ்தானில் நிலவும் அதிருப்தியை பிரதிபலிக்கின்றன. குறிப்பாக, பலூச் பஷ்துன் பிரிவினரும் பிடிஐ கட்சியினரும் ராணுவத்துக்கு சவால் விடுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் உள்நாட்டு கலகம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர்.. முதல்வர் ஸ்டாலினை உசுப்பும் மத்தியமைச்சர் எல்.முருகன்!
இதையும் படிங்க: பாகிஸ்தான் தோற்று போன ஒரு நாடு.. பாக்.கை டாராக கிழித்து தொங்கவிட்ட ஓவைசி!