வீட்டிலேயே காய்கறி, பழங்களை இயற்கை முறையில் விளைவித்து குடும்பத் தேவையை பூர்த்தி செய்வதோடு, கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், இல்லத்தரசிகளுக்கான புதிய "வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்" திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. 2026–27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், இந்தத் திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிய திட்டத்தின் மூலம், வீட்டில் இருக்கும் பெண்கள் தங்கள் வீடு அல்லது மாடியில் காய்கறி, கீரை, பழவகைகள் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்ய தேவையான பல்வேறு உதவிகள் வழங்கப்பட உள்ளன. மாடித்தோட்டம் அமைக்க தேவையான இடுபொருள் தொகுப்புகள், தரமான காய்கறி விதைத் தொகுப்புகள், பழச் செடிகள், நீரியல் தோட்டம் (Hydroponics), செங்குத்துத் தோட்டம் (Vertical Garden) அமைப்பதற்கான வசதிகள் மற்றும் நிழல்வலைக் குடில்கள் அமைக்கவும் அரசின் சார்பில் ஆதரவு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மூலம் இல்லத்தரசிகள் ஆரோக்கியமான, ரசாயனமில்லா காய்கறிகளை வீட்டிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்துவதுடன், உபரி விளைபொருட்களை விற்பனை செய்து சிறிய அளவில் கூடுதல் வருமானமும் ஈட்ட முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் இந்தத் திட்டம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிக மகசூல் எடுத்தால் ரூ.2.50 லட்சம் பரிசு! நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருது! அசத்தல் அறிவிப்பு!

தமிழகத்தில் ஏற்கனவே மாடித்தோட்டம் திட்டம் நடைமுறையில் இருந்தாலும், அதனை மேலும் விரிவுபடுத்தி பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் இந்த புதிய முயற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட்டில் இதனுடன், ரூ.4 கோடி செலவில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.27.82 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
இல்லத்தரசிகளை சுயசார்புடன் முன்னேற்றுவதோடு, வீட்டுத் தேவைக்கான பாதுகாப்பான உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் இந்த அறிவிப்பு, வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அதிக மகசூல் எடுத்தால் ரூ.2.50 லட்சம் பரிசு! நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருது! அசத்தல் அறிவிப்பு!